மன்னார் மாவட்டத்தில் மின்சாரத்தில் அடிக்கடி ஏற்படும் தடைகள் காரணமாக கல்வி பொது தராதர உயர்கல்வி, பாடசாலையில் இடம்பெற்றுவரும் 2ம் தவணை பரீட்சைக்காக ஆயத்தப்படுத்தும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல் வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மின்விநியோக தடைக்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர், அமைச்சர் சியம்பலப்பிட்டியவிடம் வலியுறுத்தியுள்ளார்.
மன்னாரில் இடம்பெற்றுவரும் மின் தடை காரணமாக மாணவர்கள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்கிவருவதாக பெற்றோர்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் தெரிவித்ததையடுத்தே, அமைச்சர் ரிஷாட் இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சுமார் ஏழு, எட்டு மணித்தியாலங்கள் மின்சாரத்தில் தடைகள் ஏற்பட்டு இருந்தன. அதற்கான காரணம் மின்துண்டிப்பு அல்ல எனவும், மின்சார கடத்தியில் ஏற்பட்ட கோளாறே காரணம் எனவும், தமக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார். க.பொத உயர்தர பரீட்சை நடக்கும் காலத்தில் மின்சாரப் பணியாளர்களை தேவையான அளவு அமர்த்தி, எந்த நேரத்திலும் பணியாற்றக்கூடியவகையில் தயார் நிலையில் வைக்குமாறு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டியவிடம் அமைச்சர் ரிஷாட், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் மின்சார சபையின் வடமாகாண பொது முகாமையாளர் குணதிலக்கவிடமும் இந்தப் பிரச்சினையை அமைச்சர் சுட்டிக்காட்டிய போது, மின்சாரப் பணியாளர்கள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், க.பொத உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எந்தவிதமான இடையூறுகளும் வராதவாறு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் அடுத்த ஆண்டு ஜனவரியில் உயிலங்குளத்தில் பாரியதொரு மின்பிறப்பாக்கி பொருத்தப்படவுள்ளது எனவும், அதன் பின்னர் மன்னார் மாவட்டத்தில் மின்சாரம் எந்தவிதமான தடைகள் இன்றி, சீராக விநியோகிக்கப்படுமெனவும் அமைச்சரிடம் அவர் தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு