Breaking
Fri. Nov 15th, 2024

மன்னார் மாவட்ட கடற்பிரதேசத்தில் அந்த மாவட்டத்தில் இயங்கி வரும் மீனவர் சங்கங்களின் அனுமதியை பெற்றுக்கொள்ளாமல் தென்னிலங்கையிலிருந்து வந்து பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு அந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு தடை விதித்துள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கொண்டுவந்த தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக் கொண்ட அபிவிருத்திக்குழு சிலாவத்துறை கடற்பிரதேசத்தில் பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு கடற்றொழிற் திணைக்களப்பணிப்பாளர் தென்னிலங்கை மீனவர்களுக்கு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறச் செய்வதெனவும் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் ஏகமனதாக முடிவு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று முன்தினம் (21) காலை மன்னார் கச்சேரியில் இடம்பெற்றபோது மீனவர் பிரச்சினை தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் காட்டமான கருத்துக்களை வெளியிட்டார்.

கொழும்பில் இருந்து கொண்டு பணிப்பாளர் பிழையான நடைமுறைகளை பின்பற்றுவதாகவும் தென்னிலங்கை மீனவர்களுக்கு புதுப் புதுக்கடிதங்களை அவர்கள் மன்னாரில் தங்கியிருந்து தொழில் செய்யும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இந்த தீர்மானத்திற்கு மாற்றமாக பணிப்பாளர் செயற்பட்டு பலாத்காரமான வழிமுறைகளில் ஈடுபட்டால் அதன்பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் அவரே வகை சொல்ல வேண்டி நேரிடுமெனவும் அமைச்சர் ஆணித்தரமாக தெரிவித்தார்.

மன்னாரிலுள்ள அதிகாரிகள் அற்ப சொற்ப சலுகைகளுக்காக இவ்வாறான பிழையான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாதெனவும் சட்டத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடவேண்டாமெனவும் அவர் குறிப்பிட்டார்.

புலம்பெயர் மீனவர்களுக்கு இற்றை வரை வழங்கப்படாத அனுமதி முறையை தற்போது புகுத்த எத்தனிப்பது பிழையான நடவடிக்கை என அமைச்சர் சுட்டிக்காட்டினார். எந்த ஒரு அதிகாரியும் இவ்வாறான வரலாற்றுத் தவறுக்கு இடமளிக்க வேண்டாமெனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் தென்னிலங்கை மீனவர்கள் எவ்வாறு மன்னாருக்கு வந்து தமது மீனவத்தொழிலை மேற்கொண்டார்களோ அதே போன்று தொடர்ந்தும் செயற்படலாம் என மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஏகமனதான முடிவொன்றும் எடுக்கப்பட்டது.

மீனவர் பிரச்சினை தொடர்பில் எம்பிக்களான மஸ்தான், சார்ல்ஸ், சிவசக்தி ஆனந்தன், மற்றும் மாகாண சபை அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோர் ஆக்கபூர்வமான கருத்துக்களைதெரிவித்தனர்.

By

Related Post