Breaking
Thu. Dec 19th, 2024

விசாரணைகளை வலியுறுத்தி மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சுகாதார அமைச்சருக்கு கடிதம்!

மன்னார் பொது வைத்தியசாலையில் தாய், சேய் உயிரிழந்தமை தொடர்பில் பகிரங்கமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவை கடிதம் மூலம் கேட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய், சேய் மரணங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியே இந்தக் கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்.

குறித்த தாய் மூச்சுத்திணறல் உட்பட்ட சில உபாதைக்குள்ளாமை தொடர்பில் அவரது உறவினர்கள அங்கு கடமையிலிருந்தவர்களுக்குச் சுட்டிக்காட்டியும் அவற்றைப் புறந்தள்ளி சாதாரண மகப்பேற்றுப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது அந்த தாய் மிகவும் கஷ்டமான நிலையிலேயே காணப்பட்டுள்ளார். இது தொடர்பில் மீண்டும் அவரது உறவினர்கள் வைத்தியர்கள், தாதியர்களிடம் சுட்டிக்காட்டியும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை எனவும் இதன் காரணமாகவே தாயின் மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலையில் அனைத்து வசதிகள் இருந்தும் அசட்டைப்போக்குக் காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணின் சிசுவும் உயிரிழந்தமையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இந்த நிலையில், உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்து மகப்பேற்று விடுதி பகுதியில் போராட்டம் நடத்தியதால் அங்கு பதட்டமான நிலையும் ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற மன்னார் நீதிவான் இருவரது சடலங்களையும் பிரதே பரிசோதனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இருவரது மரணங்கள் தொடர்பில் மக்கள் மத்தியிலும் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மன்னார் பொது வைத்தியசாலை மீதான நம்பிக்கையையும் மக்கள் இழக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

இதற்கு முன்னரும் இதே வைத்தியசாலையில் சிந்துஜா என்ற இளம் தாய் மரணமடைந்தமை தொடர்பிலும் வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு தற்போது இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றுள்ளது.

எனவே, தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் ஏன் இடம்பெறுகின்றன என்பதனை மத்திய சுகாதார அமைச்சு மட்டத்திலும் விசாரணை செய்து குற்றவாளிகளாகக் காணப்படுவோரை தண்டிக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு செய்வதால் மட்டும் எதிகாலத்தில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறாது தடுக்க முடியுமென தான் நம்புவதாகவும் சுகாதார அமைச்சருக்கு ரிஷாத் பதியுதீன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Post