ஜப்பானின் நடந்துவரும் வாகன கண்காட்சியில், மாசுக்கட்டுப்பாடு தொடர்பான மென்பொருளில் மோசடி செய்தற்காக வோக்ஸ்வேகனின் புதிய சி.இ.ஓ. மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த மாதம் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, வோக்ஸ்வாகன் டீசல் கார்களின் மாசுக்கட்டுப்பாடு தொடர்பான மென்பொருளில் மோசடி செய்திருப்பதை கண்டறிந்து அது பற்றிய செய்தியை வெளியிட்டது.
ஒரு கோடியே 10 லட்சம் டீசல் கார்களின் மாசுக்கட்டுப்பாட்டில் மோசடி செய்திருப்பதை அந்த நிறுவனமும் ஒப்புக்கொண்டது. இதற்காக மன்னிப்பும் கேட்டது. இந்த செய்தி வெளியான பிறகு வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் சரிந்துவிட்டது. இதை தொடர்ந்து வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்ட்டின் வின்டர்கான் ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து வோக்ஸ்வேகனின் புதிய சி.இ.ஓ.-ஆக ஹெர்பர்ட் தீஸ் பொறுப்பேற்றார். இவர் வாடிக்கையாளர்களிடம் நிறுவனத்தின் மதிப்பை மீண்டும் உயர்த்த போராடி வருகிறார். இந்நிலையில் ஜப்பானின் நடந்துவரும் வாகன கண்காட்சியில் இன்று பேசிய ஹெர்பர்ட் “எங்கள் நிறுவனத்தின் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் வோக்ஸ்வாகன் கார்கள் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.