– ப.பன்னீர்செல்வம் – ஆர்.ராம் –
எனது அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளேன். எனவே எனக்கெதிராக மரண அச்சுறுத்தல் தொடர்பில் நான் அஞ்சப் போவதில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சபையில் தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்.பியுமான அநுர திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினையொன்றைக் கிளப்பினார்.
இதில் சபாநாயகருக்கு (உங்களுக்கு) தொலை பேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்று நீங்கள் நேற்று புதன்கிழமை சபையில் வெளிப்படுத்திய விடயம் இன்றைய ஊடகங்களில் முதன்மைச் செய்தியாக வெளிவந்துள்ளது.
எனவே, இவ்விடயம் தொடர்பில் இப்பாராளுமன்றம் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும்.
இச் சபையில் பலர் பல்வேறுவிதமான கருத்துக்களை வெளியிடலாம். விவாதங்களை முன்வைக்கலாம். இவையனைத்தையும் செவிமடுத்து அவை தொடர்பில் சபாநாயகரான நீங்களே இறுதித் தீர்வை வழங்குவீர்கள். அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
இது தான் பாராளுமன்ற சம்பிரதாயமாகும். இதனை எதிர்த்து உங்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்திருப்பது பாராளுமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயலாகும்.
எனவே உங்களுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் தொடர்பாக அதனை விடுத்தவர் யார்? உட்பட அது விடயம் தொடர்பாக நீங்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என அநுர திஸாநாயக்க எம்.பி.கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த போதே சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கண்டவாறு பதிலளித்தார். சபாநாயகர் தனது பதிலில் அநுர திஸாநாயக்க எம்.பி.இக்கேள்வியை கேட்டதையிட்டு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இது தொடர்பில் எனது பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்துள்ளேன். நாளை பொலிஸ்மா அதிபரைச் சந்தித்து பேச்சுக்களை நடத்தி முடிவெடுப்பேன்.
இது தொடர்பிலான முடிவை நாளை சபைக்கு அறிவிப்பேன் என்றார். இதன் போது கருத்து தெரிவித்த பந்துல குணவர்த்தன எம்.பி.
எம்.பிக்களின் பாதுகாவலராக இருப்பவர் நீங்கள். எனவே உங்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை பாரதூரமான விடயமாகும். எனவே இதனை தேடிப்பார்க்க வேண்டும் என்றார்.