மரண தண்டனை மீளவும் அறிமுகம் செய்யப்பட வேண்டுமென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சிங்கள பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை அமுல்படுத்துவது குறித்த பிரேரணை ஒன்று எதிர்வரும் 22ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளேன்.
பிரேரணையாக அல்லது ஒத்தி வைக்கப்பட்ட பிரேரணையாக முன்வைப்பதா என்பது குறித்து அமைச்சர்கள் கலந்தாலோசித்து வருகின்றனர். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தெளிவுபடுத்தி அவர்களின் ஆலோசனையும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியைப் போன்றே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பலரும் மரண தண்டனையை அமுல்படுத்த விருப்பம் வெளியிட்டுள்ளனர். நாட்டின் ஒட்டு மொத்த மக்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.
நாட்டில் மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டிருந்தது. எனவே தற்போது புதிதாக மரண தண்டனை அறிமுகம் செய்யப்படவில்லை. ஏற்கனவே இருந்தது மீளவும் அமுல்படுத்தப்படவுள்ளது.
குற்றச் செயல் இடம்பெற்றவுடன் அது குறித்து பேசி பின்னர் அதனை மறந்து விடும் கலாச்சாரம் நாட்டில் நிலவுகின்றது. இம்முறை அமைச்சரவை மரண தண்டனையை அமுல்படுத்தும் வரையில் அதற்கான முனைப்புக்களை மேற்கொள்ளும்.
கடந்த காலங்களில் கொலைகள், பாலியல் வன்கொடுமை, சிறுவர் துஸ்பிரயோகம், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
பிணையில் செல்லும் குற்றவாளிகள் மீளவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என ரஞ்சன் ராமநாயக்க சிங்கள பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.