சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறைகள் மற்றும் அதன் பின்னரான படுகொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களானது உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மிகவும் குறைவாகும்.
எனவே இப்படியான குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை இறுதித் தீர்வாக அமைந்துவிடாது என்று அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின்போது ஆளும் கட்சி எம்.பி.யான ஹிருணிக்கா பிரேமச்சந்திரவினால் கொண்டுவரப்பட்டதான சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறை அதன் பின்னரான கொலை ஆகியவற்றுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற ரீதியிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறை, கொடூரமான கொலைகள் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றன. இத்தகைய குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றே இங்கு வலியுறுத்தப்படுகின்றது.
எனினும் சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறை மற்றும் அதன் பின்னரான படுகொலைகளைப் பொறுத்தவரையில் இவை உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மிகக் குறைவானவையே.
பௌத்த மதத்தை தழுவுகின்ற இந்தோனேஷியாவில் இவை அதிகரித்துக் காணப்படுகின்றன. அதேபோன்று இந்தியாவிலும் இந்நிலை அதிகமானது.
இன்று எமது நாட்டில் மரண தண்டனைக் கைதிகளாக ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் காணி விவகாரம் மற்றும் காதல் விவகாரம் ஆகியவற்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். மாறாக சிறுவர் துஷ்பிரயோகத்திற்காகவோ அல்லது பாலியல் வன்முறைக் குற்றத்துக்காகவோ அல்ல.
ஆகவே எமது நாட்டில் இடம்பெறுகின்ற இத்தகைய குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மரண தண்டனை இறுதித் தீர்வாக அமைந்துவிடாது. மாறாக எமது நாட்டின் கலாசாரம், கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும், சமுதாயச் சீர்கேடுகளை மாற்றியமைக்க வேண்டும் என்றார்.