மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், புத்தளம் மாவட்டத்தின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி, மறிச்சுக்கட்டியா அல்லது வில்பத்துவா என்று தெளிவாகத் தெரியாமல், தென்பகுதியில் உள்ள சில பௌத்த தீவிரவாதிகளும், அவர்களின் ஆதரவாளர்களுமாகிய சுற்றுச் சூழலியலாளர்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்தப் பிரதேசம் மறிச்சுக்கட்டிதானா அல்லது வில்பத்துதானா என்று உண்மையிலேயே தெரியாமல்தான் அவர்கள் தீவிரமான பிரசாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூற முடியாமல் இருக்கின்றது. ஏனெனில், அந்தப் பிரதேசத்திற்குத் தாங்கள் சென்று நேரில் பார்த்து உண்மையான நிலைமைகளை அறிந்திருப்பதாக அவர்கள் அடித்துக் கூறியிருக்கின்றார்கள்.
அவர்கள் கண்டறிந்துள்ள உண்மையின்படி, நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் புத்தளம் பிரதேசத்தில் இருந்து வில்பத்து வனப்பகுதிக்குச் சென்று அங்கு காடுகளை அழித்து அந்த சரணாலயத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் குடியேறியிருக்கின்றார்கள் என்பதும், அரசாங்கத்தினால் குறித்தொதுக்கப்பட்டுள்ள வில்பத்து சரணாலயத்திற்குச் சொந்தமான வனப்பகுதியில், சட்ட விரோதமாக வீடுகளை அமைத்துள்ளதுடன் கட்டடங்களையும் கட்டியிருக்கின்றார்கள் என்பதும் தெரியவந்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இதனை, முஸ்லிம் குடும்பங்களின் நீதிக்குப் புறம்பான நடவடிக்கைகள் என வர்ணித்துள்ள அவர்கள் இது தொடர்பாக தென்னிலங்கையில் உள்ள சிங்களம் மற்றும் ஆங்கில ஊடகங்களுக்குத் தகவல்கள் வழங்கி அதனைப் பெரும் பிரசாரமாக முன்னெடுத்திருக்கின்றார்கள். அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்து பெற்றுத் திகழும் அமைச்சராகிய ரிஷாத் பதியுதீன் இத்தகைய சட்டவிரோத – நீதிவிரோதச் செயற்பாட்டுக்குப் பின்னணியில் இருந்து தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயற்பட்டிருக்கின்றார் என்றும் அவர்கள் பகிரங்கமாகவே குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.
யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களாகின்றன. மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் மறிச்சுக்கட்டி பிரதேச மக்கள் தமது சொந்தக்காணிகளுக்கு – சொந்த ஊர்களுக்குத் திரும்பியிருந்தார்கள். கடந்த 1990 ஆம் ஆண்டு வடக்கில் இருந்த முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என கடுமையாக அறிவுறுத்தி அவர்களை முழுமையாக வெளியேற்றியிருந்தார்கள். அப்போது, பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் குடும்பங்கள் புத்தளம் மாவட்டத்திற்குச் சென்று, அங்கு பல இடங்களிலும் தஞ்சமடைந்தன. மதவாச்சி, அனுராதரபுரம் போன்ற பிரதேசங்களிலும் கணிசமான குடும்பங்கள் அப்போது புகலிடம் தேடியிருந்தன.
இருபது இருபத்திரெண்டு வருடங்களுக்குப் பின்னர் தமது சொந்தக் கிராமங்களாகிய மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி, கொண்டச்சி போன்ற கிராமங்களுக்கு, அந்த மக்கள் திரும்பி வந்தபோது, தமது காணிகளை அவர்கள் காணவில்லை. ஊர்கள் காடுகளாகக் காட்சி தந்தன. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஆளரவமற்றிருந்த அந்தப் பிரதேசம், பிரதான வீதியில் இருந்து உள்ளே செல்ல முடியாதவாறு, காடாகிப் போயிருந்தது. பற்றைகளும் ஆளுயரத்திற்கு மேல் வளர்ந்திருந்த காட்டு மரங்களுமாக அது அடர்ந்ததொரு காடாகவே காட்சியளித்தது.
மிகவும் கஷ்டப்பட்டு தமது காணிகளின் எல்லைகளைக் கண்டுபிடித்து. காடுகளை அழித்து கொட்டில்கள் அமைத்து அவர்கள் மீள்குடியேறத் தொடங்கினார்கள். அப்போது மறிச்சுக்கட்டி கிராமத்தின் ஒரு பகுதியில் பொதுமக்களினதும், கிராமத்தின் பொதுக் காணியிலும் பல ஏக்கர் பரப்பளவான இடத்தைப் பிடித்து முகாம் அமைத்து நிலைகொண்டிருந்த கடற்படையினர், அந்தப்பிரதேசம் தங்களுக்குச் சொந்தமானது, அங்கு வெளியார் எவரும் வரமுடியாது எனக் கூறி, மீள்குடியேறுவதற்காக, முஸ்லிம் குடும்பங்கள் அமைத்திருந்த குடிசைகளுக்குத் தீவைத்துச் சென்றார்கள்.
தமது இடங்களுக்கு, பல வருடங்களுக்குப் பின்னர் திரும்பியிருந்த அந்த மக்களின், சொந்த ஊருக்குத் திரும்பியிருந்த மகிழ்ச்சியையும் அந்தத் தீ சுட்டுப் பொசுக்கியது. அதனால் தீச்சுவாலையில் மீள முடியாமல் சிக்கியவர்களைப் போன்று அவர்களுடைய உள்ளங்கள் எரிந்து போயின. படையினருடைய அந்த வன்முறை அவர்களைச் சுட்டெரித்தது. அந்த வெப்பமும், அந்தத் தீயினால் ஏற்பட்ட தீப்புண் வேதனையும் அவர்களை வாட்டி வதைத்தது. முதலில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து சோர்ந்த அவர்களில் பலர், மீண்டும் புத்தளத்திற்கே ஓடிச் சென்றார்கள். தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த தங்களுடைய காணிகளை விட்டுச் செல்ல முடியாத நிலையில் ஆண்கள் மாத்திரம் அங்கேயே தங்கியிருந்து, தமது உரிமைக்காகப் போராடினார்கள். படிப்படியாகப் பல குடும்பங்கள் திரும்பி வந்தன. அரச அதிகாரிகளும் அந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்தார்கள். அவற்றுக்கெல்லாம் அரசியல் ரீதியான தலைமையை வழங்கி அரச மட்டத்தில் தேவையான நடவடிக்கைகளை அந்த மக்களின் பாராளுமன்ற பிரதி நிதியும் அமைச்சருமாகிய ரிசாட் பதியுதீன் மேற்கொண்டிருந்தார்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அப்போதைய அரசாங்கம் இறுதி யுத்த மோதல்களின்போது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து சென்ற குடும்பங்களின் மீள்குடியேற்றத்திலேயே கவனம் செலுத்தியிருந்தது. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அப்போது செட்டிகுளம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். வசதிகளற்ற நிலையில் முட்கம்பி வேலிக்குள் கடும் பாதுகாப்புக்குள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர்களை சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்ற அழுத்தம் இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. அந்த அழுத்தம் காரணமாக, அவர்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. இந்த மீள்குடியேற்றத்திற்கு யு.எ.ன்எச்.சி.ஆர், ஐ.நா. உள்ளிட்ட உலக அமைப்புக்களும், பல சர்வதேச தொண்டு நிறுவனங்களும் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் உதவிகளை வழங்கியிருந்தன.
ஆனால் இருபது வருடங்களுக்கு முன்னர் வடபகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்களின் மீள்குடியேற்றம் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் அந்த மீள்குடியேற்றத்தின் உதவிகள், அரசாங்கத்தின் சலுகைகள் என்பன தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்த முஸ்லிம் குடும்பங்களுக்குக் கிடைக்கவில்லை. இதனால் அப்போது மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனினாலும் எதனையும் செய்ய முடியாதிருந்தது. இதன் காரணமாகவே இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் என்பது சிக்கல் நிறைந்ததாகவும் தாமதமுள்ளதாகவும் மாறியிருந்தது.
ஆயினும் முஸ்லிம் அமைச்சர் என்ற ரீதியில் முஸ்லிம் தொண்டு நிறுவுனங்களின் உதவிகளையும் பாகிஸ்தான் தூதரகத்தின் ஊடாக அந்த நாட்டு அரசாங்கத்தின் உதவிகளையும் பெற்று மீள்குடியேறிய குடும்பங்களுக்கான நிரந்தர வீடுகள், பள்ளிவாசல்கள் மற்றும் பொதுத் தேவைக்குரிய கட்டிடங்கள் என்பன அமைக்கப்பட்டன. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் கூரை மீது அவற்றை அமைப்பதற்கு நிதியுதவி வழங்கிய நிறுவனமாகிய ஜெசின் சிற்றி என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு பெயர் பொறிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் உள்ளிட்ட, அந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வீடுகளும் மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி, கொண்டச்சி போன்ற கிராமங்களிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் இந்தப் பிரதேசத்திற்குச் சென்று அங்கு என்ன நடந்திருக்கின்றது என்பதைப் பரிசீலனை செய்துள்ள சூழலியலாளர் (Head of the Biodiversity conservation Center pubudu Weeraratne) புபுது வீரரத்ன, தாங்கள் கண்டறிந்தவை தொடர்பான அறிக்கையொன்றை, சர்வதேச சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, ஜுன் மாதம் 5 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கையளித்துள்ளார். வில்பத்து தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள கசற் அறிவித்தல்கள் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ள தேசப்படங்கள் என்பவற்றின் அடிப்படையில் இந்த வீடுகள் கட்டடங்கள் அனைத்தும், வனப்பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தின் உள்ளேயே அமைக்கப்பட்டிருக்கின்றன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி வனவிலங்கு காணி ஒதுக்கீட்டு திணைக்களத்தினால் 1080 ஏக்கர் காணிகளில் குடியேற்றம் செய்யலாம் என அனுமதி வழங்கியுள்ள போதிலும், அதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டிலேயே இந்த வீடுகள் கட்டடங்கள் என்பன அந்தத் திணைக்களத்திடம் அனுமதி பெறாமலேயே நிர்மாணிக்கப்பட்டுவிட்டன என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனாலும், சுற்றுச் சூழலுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் தொடர்பில் விரிவான ஆய்வு நடத்தாமல் வனவிலங்கு காணி ஒதுக்கீட்டு திணைக்களம் அத்தகைய அனுமதி கடிதத்தை வழங்க முடியாது என தெரிவித்துள்ள புபுது வீரரத்ன, இந்தத் திணைக்கள அதிகாரிகளினால் அனுமதிக்கப்பட்டுள்ள 1080 ஏக்கர் நிலப்பரப்பையும் மீறி அதிக அளவிலான பிரதேசத்தில் குடியேற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று கூறியுள்ளார்.
மேற்குக் கரையோரத்தையும் உள்ளடக்கியுள்ள இந்தக் குடியேற்றங்கள், மீள்குடியேற்றமல்ல. இங்கு மக்கள் புதிதாகக் குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ள வீரரத்னவின் அறிக்கை, இது ஜஸின் நகரம் என அந்த வீடுகளை நிர்மாணித்து உதவிய நிறுவனத்தின் பெயரில் பெயரிடப்பட்டிருக்கின்றது என்றும் குற்றம் சுமத்தியிருக்கின்றது. அந்த நேரத்தில் இந்த குடியேற்றத்திற்கான காணியை வழங்கிய அரசியல் அதிகாரம் பெற்றிருந்த புள்ளியே இதில் முக்கிய குற்றவாளியாவார் என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது.
ஆனால் உண்மையான நிலை என்ன?
மன்னாரில் இருந்து வவுனியா மற்றும் மதவாச்சிக்குச் செல்கின்ற பிரதான வீதி ஏ14 என்று அழைக்கப்படுகின்றது. இந்த வீதியில் தள்ளாடி இராணுவ முகாம் அமைந்துள்ள சந்தியைக் கடந்து சிறிது தூரத்திலேயே வை சந்தி (Y.Junction) என்றழைக்கப்படுகின்ற சந்தியொன்று உள்ளது. இந்தச் சந்தியில் இருந்து வங்காலை, நானாட்டான் ஊடாக சிலாவத்துறை, முசலி, முள்ளிக்குளம், கல்லாறு எனப்படுகின்ற வீதிக்குக் குறுக்காகச் செல்கின்ற ஆறு, அடுத்ததாக மறிச்சுக்கட்டி, அதனையடுத்து வீதிக்குக் குறுக்காக பாய்கின்ற மோதரகம ஆறு என்பவற்றைக் கடந்து வில்பத்து வனவிலங்கு சரணாலயத்திற்குள் புகுந்து அப்படியே புத்தளம் நகரைச் சென்றடைகின்றது.
மன்னார் தள்ளாடிக்கு அருகில் உள்ள வை சந்தியில் இருந்து புத்தளத்திற்குச் செல்கின்ற இந்த வீதி மன்னார் வீதி என்று அழைக்கப்பட்டபோதிலும், வை சந்தியில் இருந்து மறிச்சுக்கட்டி வரையில் இந்த வீதிக்கு பி 403 என பெயரிடப்பட்டிருக்கின்றது. மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் இந்த வீதியில் சந்திகள் எதுவும் இல்லாத போதிலும், மறிச்சுக்கட்டிக்கு அப்பால் புத்தளம் வரையிலான இந்த வீதிக்கு பி 379 என பெயரிடப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் மறிச்சுக்கட்டி என்ற இடமானது மிகவும் முக்கியமான நில அடையாளமுள்ள இடமாகக் கருதப்பட்டு வந்திருப்பது புலனாகின்றது.
சிலாவத்துறை சந்தியில் இருந்து முசலி, முள்ளிக்குளம் என்பவற்றைக் கடந்து செல்லும்போது வழியில் கல்லாறு குறுக்கிடுகின்றது. இந்த ஆறு இந்த வீதியைக் குறுக்கறுத்துச் செல்கின்ற போதிலும், அங்கு பாலம் எதுவும் அமைக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் மாரி காலங்களில் கடும் மழை பெய்து வெள்ளம் ஏற்படும் போது இந்த இடத்தைக் கடந்து செல்ல முடியாதவாறு ஆள் உயரத்திற்கும் அதிக உயரத்தில் வெள்ளம் பாய்ந்தோடும். அப்போது இந்த வீதியில் ஆற்று வெள்ளம் வடியும் வரையில் வாகனங்களிலோ நடந்தோ எவரும் பிரயாணம் செய்ய முடியாதவாறு போக்குவரத்து தடைபட்டிருக்கும். இந்த கல்லாற்றில் இப்போது கடற்படையினர் நிலைகொண்டிருக்கின்றார்கள். இந்த இடத்தில் இருந்து அனுமதிப்பத்திர முறையில் மணல் எடுத்துச் செல்கின்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. யுத்த காலத்திலும், முன்னைய ஆட்சிக் காலத்திலும் இந்த இடத்தில் கடற்படையினர் வீதிச் சோதனையுடன் கூடிய பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். இப்போதும் அவர்கள் அங்கு கடமையில் இருக்கின்றார்கள். எனினும் வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. ஆனால் மணல் வியாபாரத்தை அவர்கள் கண்காணிப்பதாகச் சொல்லப்படுகின்றது.
இந்தக் கல்லாற்றில் இருந்து இந்த வீதியில், மறிச்சுக்கட்டியைக் கடந்து சிறிது சென்றதும், மோதரகம ஆறு குறுக்கிடுகின்றது. அந்த ஆற்றுக்கு அப்பால் உள்ள பிரதேசமே வில்பத்து சரணாலய பிரதேசமாகும். மோதரகம ஆற்றில் இருந்து சிறிது தூரம் வரையில் வில்பத்து எல்லைக்கு வெளியில் உள்ள அந்த வனப்பகுதிக்கென ஒதுக்கப்பட்ட காணிகளைக் கொண்ட பிரதேசம் அமைந்துள்ளது. புத்தளம் மன்னார் வீதியில் பொதுவாக வில்பத்து சரணாலயத்திற்கான எல்லையாக இந்த மோதரகம ஆறே அமைந்திருக்கின்றது. அது மட்டுமன்றி இந்த மோதரகம ஆறே புத்தளம் மாவட்டத்தையும், மன்னார் மாவட்டத்தையும் இரண்டாகப் பிரிக்கின்ற எல்லைக்கோடாகவும் அமைந்திருக்கின்றது.
இந்தப் பின்னணியில் கல்லாற்றுக்கும், மோதரகம ஆற்றுக்கும் இடையில் புத்தளம் – மன்னார் பிரதான வீதியை மையமாகக் கொண்டு அமைந்துள்ள மறிச்சுக்கட்டி பிரதேசத்தையே வில்பத்து வனப்பகுதி என்றும், வில்பத்து வனப்பிரதேசத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள வனப்பகுதியென்றும் இப்போது பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது. இதுவே, மறிச்சுக்கட்டியா, வில்பத்துவா என்ற பூதாகரமான கேள்வியை எழுப்பியுள்ள சர்ச்சைக்குரிய பிரதேசமாகவும் திகழ்கின்றது.
மறிச்சுக்கட்டி என்பது இலங்கையில் மிகப்பழைய காலம் தொட்டு மக்கள் வசித்து வந்த விரல் விட்டு எண்ணக்கூடிய பிரதேசங்களில் ஒன்றாகப் பதிவிடப்பட்டிருக்கின்றது. இது மாணவர்களுக்கான பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றிருப்பதாக மறிச்சுக்கட்டியைச் சேர்ந்த உபைத்துல்லா என்ற கிராமவாசி கூறுகின்றார். பல தலைமுறைகளாக தங்களுடைய குடும்பம் மறிச்சுக்கட்டியில் வாழ்ந்து வந்ததாகவும், மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி, கொண்டச்சி ஆகிய கிராமங்களில் முஸ்லிம் மக்கள் வசித்து வந்தன என்றும், அருகில் உள்ள முள்ளிக்குளம் கிராமத்தில் கத்தோலிக்கர்களான தமிழ் மக்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.இத்தகைய பழைமை வாய்ந்த கிராமப்பிரதேசத்தில் இருந்து தாங்கள் 1990 ஆம் ஆண்டு முழுமையாக வெளியேற்றப்பட்டதன் பின்னர் 2010 ஆம் ஆண்டளவில் கடற்படையினரின் பிரச்சினைகளுக்கு மத்தியில் மீள்குடியேறி வாழ்ந்து வரும் நிலையிலேயே இப்போது புதிதான இந்தக் கிராமங்கள் வில்பத்து வனப்பகுதிக்குச் சொந்தமானது இங்கு தாங்கள் – முஸ்லிம் மக்கள் புதிதாகவே குடியேறியிருப்பதாகப் புதிய கதையை – புரளியைக் கிளப்பி தங்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கவலையுடன் தெரிவிக்கின்றார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதையடுத்து வெறிச்சோடி பாழடைந்து காடடர்ந்து கிடந்த இந்தப் பிரதேசத்தை பொருளாதார அபிவிருத்திச் செயற்பாட்டைக் கருத்திற்கொண்டு வனபரிபாலன திணைக்களம் வில்பத்து பிரதேசத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள வன பிரதேசமாக தன்னிச்சையாக 2010 ஆம் ஆண்டுக்கு முன்னதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தியிருந்தது. பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் அரசியல் உள்நோக்கத்தைக் கொண்டதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மறிச்சுக்கட்டி பிரதேசம் மட்டுமல்லாமல், மன்னார் மாவட்டத்தில் தமிழ் மக்களின் சரித்திர காலத்தில் இந்து சமயக் குரவர்களின் பாடல் பெற்ற திருத்தலமாகக் குறிப்பிடப்படுகின்ற திருக்கேதீஸ்வரம் ஆலயச் சுற்றாடலையும் இவ்வாறு வனபரிபாலனத்திற்கென ஒதுக்கப்பட்ட பிரதேசமாக முன்னைய ஆட்சியாளர்கள் பிரகடனப்படுத்தயிருக்கின்றனர். இந்தப் பிரகடனத்தை ஆதாரமாகக் கொண்டு திருக்கேதீஸ்வரம் ஆலயச் சுற்றாடலில் பௌத்த பிக்கு ஒருவர் சிறிய விகாரையொன்றை அமைத்து புத்தர் சிலையொன்றையும் நிறுவி நிலைகொண்டிருக்கின்றார். இங்கு பௌத்தமும், இந்து சமயமும் இணைந்து நிலைகொண்டிருந்ததாகவும், பௌத்தர்களாகிய தாங்கள் தாராள சிந்தையுடன் செயற்பட்டு வருவதற்குச் சிறந்த உதாரணமாகவே திருக்கேதீஸ்வரம் ஆலயம் வானுயர்ந்த அளவில் கோபுரத்தைக் கொண்டதாக நிறுவப்பட்டு அங்கு சைவம் தழைத்தோங்கியிருப்பதாகவும் அந்த பௌத்த பிக்கு தன்னைக் காண வருகின்றவர்களிடம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். பௌத்தர்களாகிய தாங்கள் ஏனைய மதத்தவர்களை அடக்கியொடுக்கவோ அல்லது அவர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் அல்ல என்றும், அவ்வாறு செயற்படுபவர்களாக இருந்தால், திருக்கேதீஸ்வரம் ஆலயம் அங்கு சீரும் சிறப்புமாக இதுகால வரையிலும் செயற்பட்டிருக்க முடியாது என்றும் தங்களின் தாராளமான மத சிந்தனை காரணமாகவே, இந்து ஆலயம் ஒன்று பெரிய அளவில் இயங்கிக்கொண்டிருக்கின்ற போதிலும் தாங்கள் மிகவும் சிறியதோர் இடத்தில் மிகவும் எளிமையாக இருப்பதாகவும் பெருமையடித்துக் கொண்டிருக்கின்றார்.
இதேபோன்று பொருளாதார அபிவிருத்தி நோக்கத்திற்காக மன்னார் மாவட்டத்தின் அல்லிராணி கோட்டை பிரதேசமும், மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பெரிய பிரதேசம் ஒன்றை வனபரிபாலன திணைக்களத்திற்கென ஒதுக்கப்பட்ட பிரதேசமாக முன்னைய ஆட்சிக்காலத்தில் அதிகாரிகள் அறிவித்திருக்கின்றார்கள். இந்த அறிவித்தலின்படி, நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஏ9 பிரதான வீதியின் ஒரு பகுதி உள்ளிட்ட கனராயன்குளம் பகுதியும் இந்த மகாவலி திட்டத்திறகெனஒதுக்கப்பட்ட பிரதேசமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இத்தகைய ஒரு பின்னணியில்தான் பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்து வந்த முஸ்லிம் மக்கள் யுத்தச் சூழ்நிலையில் இடம்பெயர்ந்து சென்று பின்னர் மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் உள்ள தங்களுடைய சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பி வந்து மீள்குடியேறுவதற்கு முன்னர், அவ்வாறு குடியேறுவது சூழல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துமா இல்லையா என்பதற்கான ஆய்வறிக்கையுடன் கூடிய அனுமதியை வனபரிபாலனத் திணைக்களத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும் என்று சூழலியலாளராகிய புபுது வீரரத்ன ஜனாதிபதிக்கு கையளித்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியிருக்கின்றார்.
பௌத்த தீவிரவாதிகளினாலும், அவர்களுடைய தீவிர ஆதரவாளர்களினாலும் மறிச்சுக்கட்டி பிரதேச மீள்குடியேற்றம் தொடர்பில் கிளப்பப்பட்டுள்ள இனவாத – மதவாத சர்ச்சையையடுத்து, இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அறிக்கைகளைக் கோரியிருப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதும், அவற்றை ஆய்வு செய்து இறுதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமது பாரம்பரிய பிரதேசத்திற்காகப் போராடி வருகின்ற மறிச்சுக்கட்டி பிரதேச மக்களின் நியாயமான கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பதற்காக 2 லட்சம் கையெழுத்துக்களைச் சேகரித்து மறிச்சக்கட்டி பிரதேசத்தின் உண்மையான நிலை தொடர்பிலான ஆதாரபூர்வமான தகவல்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கான முயற்சிகளில் முஸ்லிம் அமைப்புக்கள் சில ஈடுபட்டிருக்கின்றன. அடுத்த பத்து தினங்களில் இந்த நடவடிக்கை முற்றுப் பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதன் பின்னரே, இடம் பெயர்ந்து சென்று திரும்பி வந்து தமது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேறியுள்ள மறிச்சுக்கட்டி பிரதேச மக்கள் குடியேறியுள்ள இடம் உண்மையிலேயே மறிச்சுக்கட்டிதானா அல்லது வில்பத்துவா என்பது ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற புதிய அரசாங்கத்தின் கண்ணோட்டத்தில் தெரியவரும்.
– நன்றி வீரகேசரி பத்திரிகை –