இந்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சார்பில் முதன் முறையாக சட்டத்தரணி ருஷ்தி ஹபீபின் நெறிப்படுத்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஆஜராகியிருந்தார்.
இதுவரை காலமும் இந்த வழக்கில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகளே ஆஜராகி வந்த நிலையில் அதற்கு மேலதிகமாக ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார்.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதிக்கு விசாரணைக்காக எடுக்கப்படுமென நீதிபதி அறிவித்தார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகவியலாளருக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது,
நூற்றுக்கணக்கான வருடங்களாக மக்களினால் பாவிக்கப்பட்டு வருகின்ற இந்தப் பாதைய மூடவேண்டுமென்று அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்தப் பாதை திறக்கப்படுவதால் குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுமென்றும் இது நெடுஞ்சாலைப் பாதையெனவும் கூறியே சூழலியல் நிறுவனமொன்று இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. மக்கள் பயன்படுத்தும் இந்தப்பாதையை மூட வேண்டுமெனவும் அதனை செப்பனிடக்கூடாதெனவும் கூறுவது நியாயமானதொன்றல்ல.
உண்மையில் இது நெடுஞாலைப்பதையுமில்லை. பொறல் பாதையாக இருக்கும் இதில் சிங்கள, முஸ்லிம் மக்கள் நீண்டகாலமாக பயன் படுத்தி வந்தனர். இராணுவமும் இதனைப்பயன்படுத்துகின்றது.
மன்னார் புத்தளம் வழியாக இந்தப்பாதையூடாக கொழும்புக்கு மிகக் குறுகிய நேரத்தில் சென்றடையலாம். 32 கிலோ மீற்றர் நீளமான இந்தப்பாதையை மூடுவதன் மூலம் மக்களுக்கு பல்வேறு கஷ்டங்கள் இருக்கின்றன. அதுவும் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் குடியிருப்புக்களில் மீளக்குடியேற முயற்சிக்கும் போது இந்தப் பாதையை மூடுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனை செப்பனிட்டு பயன் படுத்துவதன் மூலம் விலங்குகளுக்கு எந்தப் பாதிப்போ ஆபத்தோ ஏற்படப்போவதில்லை. எனவேதான் இதனைப் பயன்படுத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருக்க வேண்டாமென வலியுறுத்தி வருகின்றோம். அதற்காகவே எனது சார்பில் மக்களின் நன்மை கருதி ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்த வழக்கில் ஆஜராகியதாக அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.