Breaking
Sun. Nov 17th, 2024

மறிச்சுக்கட்டி, மாவில்லு புதிய வர்த்தமானியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக உயர்மட்ட மாநாடு ஒன்று எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் இந்த மாநாடு ஜனாதிபதியின் செயலாளரினால் கூட்டப்படவுள்ளது.

முசலியில் முஸ்லிம்களுக்குரிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஜனாதிபதியினால் வனப்பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது தொடர்பாக உயர்மட்ட முஸ்லிம் தூதுக்குழு ஒன்று இன்று (07) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்துரையாடிய போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

முஸ்லிம்கள் தரப்பில் முசலி மக்களுக்கு குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி எடுத்து விளக்கிய பின்பே உரிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளடக்கிய கூட்டம் ஒன்றை கூட்டி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக இது தொடர்பாக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

வனபரிபாலனத் திணைக்களத்திற்கு உரிய காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென்ற தான் விடுத்த பணிப்புரை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, மக்கள் வாழும் பகுதிகளை அவ்வாறு வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு தான் உத்தரவிடவில்லை என்றும் தெரிவித்தார்.

இதேநேரம் முசலிப் பிரதேசத்தில் வனப்பாதுகாப்பு பிதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி கண்டறிவதற்கு மூவர்  கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கு தான் ஏற்கனவே பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு முசலிப் பிரதேச காணிகள் வர்த்தமானி ஒன்றின் மூலம் வனப்பாதுகாப்புப் பிரதேசத்திற்குள் உள்ளடக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானிப் பிரகடனத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி விளக்கிய அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், பைஸர் முஸ்தபா ஆகியோர், 1990 ஒக்டோபரில் விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் விரட்டப்பட்ட போது முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்கள் மற்றும் விளை நிலங்கள் என்பவற்றை விடுவித்து முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.

பாதிப்புகள் பற்றி ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு  ஒன்று நியமிக்கப்பட வேண்டுமென அமைச்சர் றிஷாத் பதியுதீன் வலியுத்தினார்.

பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறை முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி ஏ. எஸ். எம். நௌபல், குறிப்பிட்ட வர்த்தமானிப் பிரகடனங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றி விளக்கக்காட்சி மூலம் விளக்கமளித்தார்.

 முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் ஜனாதிபதியைச் சந்தித்த இத்தூதுக்குழுவில் அகில இலங்கை  முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத் தலைவர் பீ.எம். பாரூக், முன்னாள் தலைவர் சட்டத்தரணி என். எம். சஹீட், அகில இலங்கை வை.எம்.எம். ஏ. பேரவையின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி அம்ஹர் ஷரீப், முன்னாள் தலைவர் கே.என்.டீன்,   முஸ்லிம் கவுன்சிலின் உப தலைவர் ஹில்மி அஹ்மத், முசலி காணி  கவனயீர்ப்பு ஏற்பாட்டாளர்களான அலீகான் சரீப். முஹம்மத் சுபியான், மௌலவி தௌபீக். முஹம்மத் காமில், சமூக சேவையாளர் இமாம் இம்தியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆஸாத் சாலி ஆகியோரும் இத் தூதுக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

Related Post