இவ்வருடம் அடுத்தடுத்து இரு மலேசியன் ஏர்லைன்ஸின் சர்வதேச பயண விமானங்கள் விபத்தில் சிக்கி அவற்றில் பயணித்த அனைவருமே உயிரிழந்து இருந்ததை அடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் மிகவும் நட்டத்துடன் இயங்குவதால் சமீபத்தில் இந்நிறுவனத்தில் பணியாற்றிய 6000 பேரை வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளது அந்நிறுவனம்.
மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் சென்ற MH370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமாகி இதுவரை ஒரு சிறிய தகவல் கூட கிடைக்காத நிலையில் இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. மேலும் உலகில் காணாமற் போன பயணிகள் விமானம் ஒன்றிட்கான மிக அதிக செலவு செய்த சர்வதேசத்தின் தேடலாகவும் MH370 இனைத் தேடும் பணி அமைந்திருந்ததுடன் அதன் தேடல் இன்னமும் தொடர்கின்றதும் குறிப்பிடத்தக்கது. 2 ஆவது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமான MH17 298 பயணிகளுடன் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்து கொண்டிருந்த போது உக்ரைன் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப் பட்டது. இதிலும் அனைத்துப் பயணிகளும் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸில் பணியாற்றி வரும் 20 000 பேரில் 6000 பேரை அதாவது 30% வீதமான ஊழியர்களை மலேசியன் ஏர்லைன்ஸ் வேலையில் இருந்து தூக்கியுள்ளது. மேலும் சுமார் 6 பில்லியன் ரிங்கிட் செலவு செய்து சீரமைப்பு பணிகளை செய்யவுள்ள மலேசிய அரசு குறித்த விமான சேவையை வேறு நிறுவனத்தின் பெயரில் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.