உலக டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரேயா நகரத்தில் இன்று காலை லிந்துலை பொது சுகாதார பரிசோதகர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் லிந்துலை பொலிஸார் உள்ளிட்ட சுகாதார தாதிமார்கள் கிராம சேவகர்கள் உட்பட நுவரெலியா பிரதேச சபை அதிகாரிகள் அடங்கலாக பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது உணவகங்கள் மற்றும் கடைத்தொகுதிகள், மதுபானசாலைகள், பாடசாலைகள் என பல்வேறுபட்ட இடங்கள் டெங்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில் டெங்கு பரவும் சூழலைக் கொண்ட வீடுகள் மற்றும் கடைத்தொகுதிகளுக்கு சிவப்பு பத்திரிகை ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் சுத்தங்களை பேணும் வகையில் மஞ்சள் பத்திரிகை அறிவித்தலும் விடுக்கப்பட்டது.
தொடர்ந்து 3 நாட்களுக்குள் டெங்கு பரவும் சூழலில் இருந்து தத்தமது கடைத்தொகுதிகள், வீடுகள், பாடசாலைகள் ஆகியவற்றை சுத்தம் செய்து காட்டாவிட்டால் மறு அறிவித்தலின்றி உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தல் விடுக்கபட்டுள்ளது.
டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நகர் பகுதிகள் மட்டுமன்றி தலவாக்கலை, நாகசேனை, லிந்துலை, மெரேயா, அகரபத்தனை, டயகம போன்ற பிரதேசங்களில் தோட்ட பகுதிகளுக்கும் விஜயத்தை மேற்கொண்டு டெங்கு பரவும் சூழலிலிருந்து பொது மக்களை காக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக லிந்துலை பொது சுகாதார பரிசோதகர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.