யுத்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் தூர்ந்து போன மல்வத்து ஓயா மற்றும் வியாயடிக்குளம் உள்ளிட்ட பல நீர்ப்பாசனக் குளங்களை உடனடியாகப் புனரமைத்து, அந்தப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தையும், விவசாய முயற்சிகளையும் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக நீர்ப்பாசன அமைச்சர் விஜிதமுனி சொய்சா, அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் உறுதியளித்தார்.
கைத்தொழில், வணிகத்துறை அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினருக்கும், அமைச்சர் விஜிதமுனி சொய்சாவுக்குமிடையில் இடம்பெற்ற நீண்டநேர கலந்துரையாடலின் போதே, இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதுடன், இது தொடர்பில் சில விடயங்களை உடன் ஆரம்பிக்குமாறு அமைச்சின் உயரதிகாரிகளுக்கு பணிப்புரையும் வழங்கப்பட்டது.
“மன்னார் மாவட்ட மக்களில் பெரும்பாலானோர், விவசாயத்தையும், சேனைப்பயிர்ச் செய்கையையும் நம்பி வாழ்பவர்ககள். யுத்தத்தின் காரணமாக இவர்கள் தமது தொழிலில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தனர். குறிப்பாக விவசாயிகள், இடப்பெயர்வு காரணமாக தமது தொழிலை கைவிட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. மழை நீரைத்தேக்கி வைக்கும் குளங்கள் அழிந்தும், தூர்ந்தும் போய்விட்டன. தற்போது அமைதி ஏற்பட்டு, விவசாயிகள் தமது தொழிலை மேற்கொள்ள ஆர்வங்காட்டுகின்ற போதும், நீர்ப் பற்றாக்குறை இடைஞ்சலாக உள்ளது. குளங்களில் நீரைத்தேக்கி வைக்க முடியாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதால், அவற்றைப் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கோரிக்கை விடுத்தார்.
மன்னார் மாவட்டத்தின் வியயடிக்குளத்தின் கீழ் சேனைப்பயிர்ச் செய்கை செய்வோருக்கு வசதியாக, முதற்கட்டமாக குளத்தினை ஐந்து கிலோமீட்டருக்கு விஸ்தரித்துத் தருமாறு அமைச்சர் றிசாத் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீர்ப்பாசன அமைச்சர், அந்தக் கோரிக்கை தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்குமாறு மன்னார் மாவட்ட பிரதம பொறியியலாளருக்கு, அந்தக் கூட்டத்தில் வைத்தே பணிப்புரையும் வழங்கினார்.
சிலாவத்துறை, போற்கேணியில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலகம் திடீரென இடைநிறுத்தப்பட்டமை குறித்து, நீர்ப்பாசன அமைச்சரின் கவனத்திற்கு அமைச்சர் றிசாத் கொண்டுவந்த போது, எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் அதனை ஆரம்பிக்கும் வகையிலான நடவடிக்கையை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு, அமைச்சர் விஜிதமுனி சொய்சா உத்தரவிட்டார்.
மன்னார் மாவட்டத்தில் முசலிப் பிரதேசத்தில் மீளக்குடியேறிய மக்கள் நீர்ப்பற்றாக்குறையினால் படுகின்ற அவலங்களை அமைச்சர் றிசாத் சந்திப்பின்போது எடுத்துரைத்ததுடன், அகத்திமுறிப்புக் குளத்திலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்தினை ஆரம்பிப்பதன் மூலம், குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியுமென்று சுட்டிக்காட்டியபோது, அமைச்சர் விஜிதமுனி சொய்சா இந்தத் திட்டத்துக்கான ஆரம்பப் பணிகளை மேற்கொள்ளுமாறு, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மழையை நம்பி, நீரைத் தேக்கிவைத்து, மூன்று போகங்களையும் மேற்கொள்ளும் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு குளங்களைப் புனரமைத்துக் கொடுப்பதன் மூலமே, நெல் உற்பத்தியை அதிகரிக்க முடியுமென்று தெரிவித்த அமைச்சர் றிசாத், வெள்ளாங்குளம், கூராய் நீர்ப்பாசனத் திட்டத்தை ஆரம்பிப்பதன் மூலம், 3000 ஏக்கர் காணிகளில் நெற்செய்கையை மேற்கொள்ள முடியும் என்று கூறிய போது, அந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கும் நீர்ப்பாசன அமைச்சர் இணக்கம் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, நீர்ப்பாசன அமைச்சின் உயரதிகாரிகள், அமைச்சர் றிசாத்தின் இணைப்புச்செயலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் பொதுசன தொடர்பு அதிகாரி ஷாஹிப் மொஹிடீன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.