பலஸ்தீன மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்பதற்கு எமது பாராளுமன்றத்தில் அவசர கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்று கொண்டுவர வேண்டும். அத்துடன் அனைத்து பள்ளிவாசல்களிலும் துஆப் பிரார்த்தனைகளை மேற்கொள்ள உலமா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புக்கு எதிராக அஸ்வர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
60 வருடங்களுக்கும் மேலாக மேற்குலக வல்லரசுகளின் ஆதரவுடன் பலஸ்தீனில் இஸ்ரேல் மேற்கொள்ளும் காட்டு தர்பார் தற்போது உக்கிரமடைந்துள்ளது. முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான அல் அக்ஸா பள்ளிவாசலுக்குள் நுழைய பலஸ்தீனர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெண்களும் சிறுவர்களும் வயது வந்தோர்களும் கொன்று குவிக்கப்படுகிறார்கள். 21ஆவது நூற்றாண்டில் நவீன முறையில் மானிட சுத்திகரிப்பு பலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ளது. இதற்கு விரோதமாக நாம் குரல் கொடுக்க வேண்டும்.
மூன்றாவது இன்திபாழாவும் பெண்களின் தியாக உணர்வோடு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அல் அக்ஸா அனைத்து முஸ்லிம்களினதும் சொத்து என்பதை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. 1967 ஆம் ஆண்டு அல் அக்ஸா தீக்கிரையாக்கப்பட்டபோது அதற்கு விரோதமாக குரல் எழுப்பி இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முஸ்லிம்களுடன் ஏனையோரும் இணைந்தார்கள்.
ஜெனீவாவும் மனித உரிமை சாசனமும் நம்மைப் போன்ற நாடுகளுக்கு மட்டும் தானா? மனித உரிமையை மரணக் குழியில் தள்ளிவிடும் அமெரிக்கத் தலைமையிலான மேற்கத்தேய வல்லரசுகளின் அட்டகாசத்தை முடக்குவதற்கும் ஐக்கிய நாடுகளை கட்டியெழுப்புவது அனைத்து முஸ்லிம்களினதும் கடமையாகும்.
அன்று பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணை மீது முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கும் எனக்கும் பேசக்கூடாதென தற்போதைய பிரதமர் ரணில் அன்று உத்தரவிட்டிருந்தார்.
இன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஜெருசலேம் பூமியை காப்பதற்கு பாராளுமன்றத்தை உசார்படுத்த வேண்டும். இது அவர்களது கடமை. அதனால் பாராளுமன்ற அடுத்த அமர்வில் சபையின் கவனத்தை ஈர்க்க அல் அக்ஸாவை மீட்க அவசரக் கவனயீர்ப்பு பிரேரணையை கொண்டுவர வேண்டும்.
அனைத்து பள்ளிவாசல்களிலும் இது தொடர்பாக துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளவும் ஜும்ஆ பிரசங்கம் நிகழ்த்தவும் உலமா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.