வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க தம்மாலான பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்ற அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா ஈருலக நற்பாக்கியங்களை அவர்களுக்கு அருளவேண்டுமெனவும் பிராத்திக்கின்றது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோர் விடயத்தில் ஜம்இய்யா வழமைபோன்று பல்வேறு வழிகாட்டல்களை வழங்கி வருகின்றது. 2016.05.15ஆம் திகதி நடைபெற்ற நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் அசாதாரண காலநிலையைக் கவனத்திற்கொண்ட ஜம்இய்யா பாவமன்னிப்பு, துஆ, தொழுகைபோன்ற அல்லாஹுதஆலாவின் நெருக்கத்ததைப் பெற்றுத் தரும் நல்லமல்களின் பக்கம் கவனம் செலுத்துமாறு பொதுமக்களை வேண்டிக் கொண்டதுடன் தனது மாவட்ட, பிரதேசக் கிளைகளை மஸ்ஜித்களுடன் இணைந்து நிவாரணப்பணிகளில் ஈடுபடுமாறும் வலியுறுத்தியது. இதன் பயனாக ஜம்இய்யாவின் இரத்தினபுரி மாவட்டக்கிளை அவிசாவளை பிரதேசத்திலும் கண்டி மாவட்ட கிளை கடுகண்ணாவ பிரதேசத்திலும் கேகாலை மாவட்டக்கிளை அரநாயக்க பிரதேசத்திலும் காலி மாவட்டக்கிளை மல்வானை பிரதேசத்திலும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன.
2016.05.18ஆம் திகதி புதன் கிழமை அவசர நிறைவேற்றுக் குழு ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. அன்றைய கூட்டத்தில் ஜம்இய்யாவின் பணியாளர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதோடு அவசர நிவாரணத்திற்கான உதவித் தொகைகளும் வழங்கப்பட்டன.
அன்றைய தினம் ஜம்இய்யாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி றிழ்வி அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் நிவாரணப்பணிகளைத் துரிதப்படுத்துமாறு உரையாற்றினார்கள். நிவாரண நிதி சேகரிப்பு தொடர்பில் ஜம்இய்யா மற்றுமொரு அறிக்கையை குறித்த தினத்தில் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஜம்இய்யாவின் பல்வேறு முயற்சிகளின் பயனாக 2016.05.20ஆம் திகதி ஜும்ஆத் தொழுகையின் பின்னர் நாடளாவிய ரீதியில் வெள்ள நிவாரண நிதி சேகரிக்கப்பட்டு ஜம்இய்யாவின் கணக்கிலும் வைப்புச் செய்யப்பட்டது.
மேலும் அனைவரும் ஒன்றுபட்ட விதத்தில், உரிய நேரத்தில் தேவையான உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு போய்ச் சேரவேண்டுமென்ற உயர்நோக்குடன் சமூகசேவைகளில் ஈடுபடும் 19 அமைப்புக்களை ஜம்இய்யா கடந்த 2016.05.20 ஆம் திகதி தலைமையகத்துக்கு அழைத்திருந்தது. இக்கூட்டம் ஜம்இய்யாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அன்றைய கூட்டத்தில் நிவாரணங்களுக்கான மத்திய நிலையம் ஒன்றை நிறுவி பாதிக்கப்படவர்களின் விபரங்களைத் திரட்டல், பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமைகளை அரசிடமிருந்து பெற்றுக் கொடுக்க முயற்சித்தல், உதவி செய்வோர் மற்றும் உதவி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வசதியான தொலைபேசி நிலையமொன்றை ஆரம்பித்து வழிகாட்டல் போன்ற நிவாரணப் பணிகளைச் செய்வதாக தீர்மானிக்கப்பட்டது. அத்தீர்மானத்துக்கமையவே ஜம்இய்யாவின் தலைமையில் ஏனைய அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களோடு நிவாரணங்களுக்கான மத்திய நிலையம் இயங்கிவருகின்றது.
வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்டிருக்கும் இழப்புக்கள் சாதாரணமானவையல்ல, அதிகமானோர் தங்களது அனைத்துப் பொருட்களையும் இழந்து நிர்க்கதியாகியிருக்கின்றனர். இந்நிலையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி றிழ்வி அவர்களின் தலைமையில் கடந்த 2016.05.27ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை கொழும்பு மஸ்ஜித்கள் சம்மேளனங்களுடன் சந்திப்பொன்று நடைபெற்றது.
நாட்டில் ஏற்பட்ட சுனாமி, வெள்ளப் பெருக்கு போன்ற பல்வேறு அனர்த்தங்களின் போது மஸ்ஜித்களை மையப்படுத்திய நிவாரணப் பணிகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொண்டது போன்றே பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிவாரணப் பணிகளை மஸ்ஜித்களை மையப்படுத்தி துரிதப்படுத்துவதே சிறந்தது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய பாதிக்கப்பட்டவர்களது நிலமைகள் சீரடைந்து அவர்கள் தங்களது இடங்களில் மீள்குடியேறும்; வரை தொடர்ந்தேச்சையாக உதவி செய்யும் வண்ணம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கொழும்பிலுள்ள மஸ்ஜித் சம்மேளனங்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பின்வரும் ஒழுங்கில் பொறுப்புக் கொடுத்துள்ளது.
புனித றமழானுக்கு சில நாட்கள் மாத்திரமே மீதியாயிருக்கும் இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் அவசரமாக தங்களது வீடுகளுக்கு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் தத்தமது சம்மேளனங்களுடன் இணைந்து மேற்கொள்ளுமாறு அனைவரையும் ஜம்இய்யா அன்புடன் கேட்டுக் கொள்கின்றது.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் எம்.எம் அஹ்மத் முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா