இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீனாவின் உப வெளிவிவகார அமைச்சர் லீ சென்மின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு ஒரு வழமையான சந்திப்பு என முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக ‘தென் சீனா மோனிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரம் இழந்ததன் பின்னர் சீனத் தலைவர் ஒருவர் முதல் தடவையாக அவரை சந்தித்துள்ளமை விசேட அம்சமாகும்.
இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கான விசேட பிரதிநிதியாகவே அந்நாட்டின் உப வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்புவதற்கு முன்பதாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்த லீ சென்மின் இலங்கை விஜயமானது வெற்றிகரமான விஜயமாக அமைந்ததாக கூறியிருந்தார். ஜனாதிபதி, பிரதமர், உள்ளிட்ட பல தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியிருந்த சீன உப வெளிவிவகார அமைச்சர் மஹிந்த ராஜபக் ஷவுடனான சந்திப்பு குறித்து எதுவும் கூறவில்லை என் பது குறிப்பிடத்தக்கது.