Breaking
Fri. Nov 22nd, 2024

மஹிந்த ராஜபக்ஷவினால் தான் நாம் ஆட்சிக்கு வந்தோம். எனவே அவரை பாதுகாக்க  வேண்டியது எமது கடப்பாடாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  சபையில்  தெரிவித்தார்.

உலகில்  எந்தவொரு முன்னாள் ஜனாதிபதிகளுக்கும்  இராணுவ பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை.  ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின்  பாதுகாப்பு தொடர்பில் பேச்சு நடத்த அரசு தயார் என்றும் பிரதமர் சபையில் அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை தினேஷ் குணவர்தன எம்.பி.,  முன்னாள்   ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்  இராணுவப் பாதுகாப்பு  நீக்கப்பட்டது தொடர்பில் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார். இதன்போதே பிரதமர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தினேஷ் குணவர்தன  எம்.பி எழுப்பிய  கேள்வியில் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து  ஜனநாயகத்தை நிலை நிறுத்தியவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.

எனவே அவருக்கு  ஆபத்துள்ளது. இதனால் அவருக்கு விசேட இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இப் பாதுகாப்பு நீக்கப்படாது என அரசு உறுதிமொழி வழங்கியது. ஆனால் இன்று  அவரின் இராணுவ பாதுகாப்பு நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இது  அவருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.  எனவே இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டதை அரசு மறுபரிசீலனை செய்ய  வேண்டும் என்று தனது கேள்வியில் தெரிவித்தார்.

இதற்கு  பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ஷவினால் தான் நாம் ஆட்சிக்கு வந்தோம். எனவே அவரை பாதுகாக்க வேண்டியது எமது கடப்பாடாகும். அதனை நாம் செய்வோம்.

ஏனென்றால் தேர்தல் முடிந்ததும் என்னை அழைத்து ஆட்சியை மஹிந்த  என்னிடம் கையளித்தார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி புஷ், பிரிட்டனின் முன்னாள் பிரதமரான ரோணி பிளேயர் உட்பட முன்னாள் தலைவர்களுக்கு  பொலிஸ் பாதுகாப்பே வழங்கப்பட்டது.

எனக்கும், ஜனாதிபதிக்கும் பொலிஸ்  மற்றும்  விசேட அதிரடிப் பாதுகாப்பே வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்தவுக்கும்  பொலிஸ், அடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக பாதுகாப்பு தேவைப்படின்  இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூடி  ஆராயலாம்.

அதேபோன்று மஹிந்த  ராஜபக் ஷவுடன்   அமர்ந்து இவ்விடயம் தொடர்பாக பேசவும் தயார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கும் பொலிஸ் பாதுகாப்பு தான் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தொடர்பில் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கு நன்கு  தெரியும். எனவே  அவர் பதிலளிப்பார் என கூறிவிட்டு பிரதமர் தனது ஆசனத்தில்  அமர்ந்தார்.

இதன் பின்னர் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் அமைச்சர் சரத்பொன்சேகா  உரையாற்றினார்.

மஹிந்த ராஜபக் ஷ எம்.பி.க்கு இராணுவ  பாதுகாப்பில்லாமல் நித்திரை செய்ய முடியாது.

அவரது பாதுகாப்பிற்குள்ள  இராணுவத்தினருக்கு  பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பில் எந்தவிதமான பயிற்சியும் இல்லை. அவர்கள் மஹிந்தவின் ஆதரவாளர்கள்.

கடந்த காலங்களில் எனது பாதுகாப்பும் பறிக்கப்பட்டது. இன்று மகிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி என்பதைவிட அவர் ஒரு எம்.பி.

எனக்கும் 15 பொலிஸாரே பாதுகாப்பிற்கு உள்ளனர்.

எனவே மஹிந்த  ராஜபக் ஷவுக்கு  பொலிஸ் பாதுகாப்பு  போதுமானதாகும். இராணுவ பாதுகாப்பு அவசியமில்லைமென்றார்.

By

Related Post