ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரத் திமிருக்கு நாட்டு மக்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி பாடம் புகட்ட வேண்டும் என்று பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பின் ஊழல் மோசடிகளுக்கு எதிராக விசேட ஆணைக்குழுவினூடாக விசாரணைகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது எதிரணியின் முதலாவது உத்தியோகபூர்வ பிரச்சாரக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிமை கண்டியில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எனக்குப் பின்னால் இவ்வளவு மக்கள் சேனை உள்ளதைப் பார்த்து நான் பெருமைப்படுகின்றேன். ஜனவரி 08ஆம் திகதி எனது வெற்றி உறுதி. எனினும், எனது இந்த வெற்றியை பண பலத்தால் அல்லது ஆயுத பலத்தால் மஹிந்த அரசு தட்டிப் பறிக்க முயற்சிக்கும். ஆனால், எதற்கும் நாம் அஞ்சாது இறுதிவரைக்கும் போராடுவோம். நான் ஜனாதிபதியானதும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழும் நிலையை இந்நாட்டில் உடனே உருவாக்குவேன்” என்றுள்ளார்.