Breaking
Thu. Nov 14th, 2024

முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பு  முற்றாக நீக்கப்பட்டுள்ளது.  இராணுவ பாதுகாப்பிற்கு பதிலாக பொலிஸ் பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணாக எவருக்கும் பாதுகாப்பு வழங்க அனுமதி இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்   கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 103 இராணுவமும் 103 பொலிஸ் உள்ளிட்ட 256 பாதுகாப்பு தரப்பினர் இப்போதுவரையில் அவரின் பாதுகாப்பிற்காக  கடமையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இப்போதிருக்கும் நிலையில் இராணுவப் பாதுகாப்பு அவசியமில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பை நீக்கிவிட்டு அதற்கு நிகராக பொலிஸ் மற்றும் விசேட பொலிஸ் பிரிவையும் நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவருக்கான பாதுகாப்பில் எந்த குறைப்புகளும் ஏற்படப்போவதில்லை. இப்போது இருக்கும் அதே பாதுகாப்பு எண்ணிக்கை தொடர்ந்தும் வழங்கப்படும். எனினும் இப்போது வரையில் முன்னாள் ஜனாதிபதிக்கு 256 பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அவரின் பாதுகாப்பில் எந்த சிக்கலும் இல்லை. பாதுகாப்பு துறைக்கு என்ற ஒரு விதிமுறை உள்ளது. பாதுகாப்பு சட்டங்களுக்கும், விதிமுறைக்கும் அமையவே பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

முன்னாள் ஜனாதிபதிக்கு மட்டுமல்ல நிகழ்கால ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் விதிமுறைகளுக்கு அமையவே பாதுகாப்பு வழங்க முடியும்.  இப்போது வரையிலும் இவர்கள் இருவருக்கும் எந்தவொரு இராணுவப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை.   எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் அவரே சந்தேகம் கொள்வதால் இப்போது அவருக்கான விசேட பாதுகாப்பு வசதிகளை வழங்கியுள்ளோம்.

இராணுவ பாதுகாப்பிற்கு பதிலாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது ஒன்றும் புதிய காரணி அல்ல. நாட்டில் ஏதேனும் அசாதாரண சூழல் அல்லது தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் பட்சத்தில் நிலைமைகளை ஆராய்ந்து இராணுவ பாதுகாப்பு வழங்கப்படும். ஆனால் இப்போது அவ்வாறான நிலைமைகள் எவையும் இல்லை என்றார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இதுவரையில் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 102  இராணுதினரையும் நீக்கிவிட்டுள்ளதாக மஹிந்த ராஜபக் ஷவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

By

Related Post