முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தேர்தலில் போட்டியிட எடுத்திருக்கும் தீர்மானம் தேர்தல் களத்தை உற்சாகப்படுத்தியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி விமர்சித்துள்ளது.
மக்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடனான வெற்றியை இலகுவில் பெற்றுத்தருமென்றும் ஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஊழல் மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை தம்வசம் வைத்திருக்கும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருக்கு ஆதரவு வழங்கும் உறுப்பினர்களை மக்கள் நிராகரிப்பது உறுதி என்றும் அவர் கூறினார்.
இந்நாட்டின் பிரஜை மற்றும் அரசியல் பிரதிநிதி என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் நுழைவு தவறானது என்றே நான் கூறுவேன்.
உதாரணத்திற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றால் மீண்டும் அவர் மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுக்க மாட்டார். அவரால் அதனை செய்ய முடியாதென்பதே உண்மையாகும்.
மஹிந்த ராஜபக்ஷவை பிரதேச சபை தேர்தலொன்றில் போட்டியிடுமாறு கூறினாலும் அவர் அதனை மறுக்காமல் ஏற்றுக்கொள்வார். ஏனெனில் அதிகாரம் மீதும் பணம் மீதும் அவர் கொண்டுள்ள வெறித்தனமான ஆசை, அவரை அதனை செய்ய தூண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதற்கான இன்னுமொறு காரணம்தான் தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கெதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை நிறுத்துவது ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி இணைந்தா அல்லது தனித்தா எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்குகையில், கட்சி செயற்குழு யானை இலட்சிணையின் கீழ் போட்டியிடுவதாக தீர்மானித்திருப்ப தாகவே அவர் கூறினார்.
மேலும் பல கட்சிகள் ஐ.தே.க. வுடன் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர் சரியான தருணத்தில் கட்சி முடிவு எடுக்கும் என்றும் கூறினார்.
-Thinakaran-