முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அழைப்பாணை உத்தரவினை பிறப்பிக்க நீதிமன்ற பதிவாளருக்கு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரி அழைப்பாணை உத்தரவுகளை பிறப்பிக்க பதிவாளருக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் ஊடாக நாட்டு பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறிச் செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்டவர்களுக்கு எதிராக முன்னனி சோசலிச கட்சி உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது. பொதுமக்கள் பாதுகாப்பு சட்ட வர்த்தமானி அறிவித்தலை மாதாந்தம் புதுப்பித்து, நாட்டில் இராணுவமயப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் முப்படையினருக்கும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், பிரியசாத் டெப் மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோர் இந்தமனுவை விசாரணை செய்திருந்தனர்.
முப்படைத் தளபதிகள், காவல்துறை மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபரும் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த மனு தொடர்பிலான விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.