மேனகா மூக்காண்டி
காணாமற்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக, அரசாங்கத்தினால் அலுவலகமொன்று திறக்கப்படுவது உறுதி. இவ்வாறு காணாமற்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதென்பது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கலாம். உண்மைகள் வெளியாகிவிடும் என்ற பயத்தினாலேயே அவர், அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார்’ என சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன கூறினார்.
காணாமற்போனவர்கள் தொடர்பில் கண்டறிவது கட்டாயத் தேவையாகும். அவர்கள் எவ்வாறு காணாமற்போனார்கள், அவ்வாறு அவர்கள் காணாமற்போனமைக்கு காரணம் என்ன, அவர்களுக்கான மரணச் சான்றிதழ்களை வெளியிடுவதா, இல்லையா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான தேவை உள்ளது. அதனால், மேற்படி அலுவலகம் கட்டாயம் நிறுவப்பட்டு, காணாமற்போனோர் தொடர்பில் கண்டறியப்படும்’ என்றும் அமைச்சர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே, முன்னாள் ஜனாதிபதியின் கருத்துகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
‘இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பதற்காகவே, மேற்படி அலுவலகம் நிறுவப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். அவரின் கூற்று, காணாமற்போனவர்களை இராணுவம் தான் கடத்திச் சென்றுள்ளது எனக் கூறுகிறது. இதன்மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவரே விளக்க வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.