பெரிய திருடனுக்கு வேட்பு மனு வழங்கியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிறிய திருடர்களுக்கு வேட்பு மனு வழங்கவில்லையாம். இதிலேயே இவர்களின் தரத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.
அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டை குடும்ப ஆட்சி இல்லாமல் நாட்டை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்டியெழுப்புவோம். என்று நிதியமைச்சரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
பெரும்பான்மை பலமற்ற எமது அரசாங்கத்தினால் இவ்வளவு வேலைத்திட்டங்கள் செய்ய முடியுமானால் அடுத்து நீங்கள் தரப்போகின்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமுள்ள அரசாங்கத்தின் ஊடாக எவ்வளவு நன்மைகளை செய்வோம் என்று பாருங்கள். மஹிந்தவுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் இந்த முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
பெரிய திருடனுக்கு வேட்பு மனு வழங்கியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிறிய திருடர்களுக்கு வேட்பு மனு வழங்கவில்லையாம். இதிலேயே இவர்களின் தரத்தை நாம் புரிந்துகொள்ளலாம். அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டை குடும்ப ஆட்சி இல்லாமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்டியெழுப்புவோம். முன்னைய ஆட்சியில் பாரிய ஊழல் மோசடிகளுடனேயே அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட் டன.
ஆனால் 100 நாள் திட்டத்தில் குறித்த மோசடி திட்டங்களை சரியான முறை யில் ஊழல் இன்றி முன்னெடுத்தோம். கொழும்பு – கண்டி அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் மீண்டும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது ரணில் விக்ரமசிங்க ஆரம்பிக்கும் திட்டம் என்பதனை குறிப்பிடுகின்றோம்.
கடந்த 10 வருடங்களில் மஹிந்த ராஜபக் ஷவினால் வழங்க முடியாத சலுகைகளையும் நிவாரணங்களையும் வழங்கி னோம். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தோம்.
மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் சர்வதேச நாடுகளுடன் சிறந்த உறவு காணப்படவில்லை. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இந்தியாவுடன் கடந்த அரசாங்கம் முரண்பட்டது. மோதிக்கொண்டிருந்தது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியில் சர்வதேச உறவுகளை மேம்படுத்தி குறித்த நாடுகளின் உதவிகளையும் முதலீடுகளையும் இலங்கைக்கு கொண்டுவர முடிந்தது.
மஹிந்த அரசாங்கம் சாதாரண மக்கள் மத்தியில் பாரிய வரிகளை விதித்தது. ஆனால் எமது அரசாங்கம் கசினோ போன்ற துறைகளுக்கே வரி விதித்தது. மக்களுக்கு நிவாரணங்களையே வழங்கினோம். பெரும்பான்மை பலமற்ற எமது அரசாங்கத்தினால் இவ்வளவு வேலைத்திட்டங்கள் செய்ய முடியுமானால் அடுத்து நீங்கள் தரப்போகின்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமுள்ள அரசாங்கத்தின் ஊடாக எவ்வளவு நன்மைகளை செய்வோம் என்று பாருங்கள். மஹிந்தவுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவோம்.
ஜனவரி எட்டாம் திகதி புரட்சி செய்தோம். அதேபோன்று இன்னும் 35 நாட்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பெறுவோம்.