முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியாது. எமது அரசியல் பயணத்தின் இடைப்பட்ட காலப்பகுதியில் சர்வாதிகார ஆட்சியொன்று ஸ்தாபிக்கப்பட்ட போதும் மக்கள் அதன் நீண்டகால பயணத்திற்கு அனுமதியினை வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார்.
1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட நல்லாட்சியின் பிரதிபலனையே இன்று மூவின மக்களும் பயன்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்hடர்.
பிரபல அரசியல் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவருமான படுகொலை செய்யப்பட்ட விஜயகுமாரதுங்கவின் ஞாபகார்த்த நிகழ்வு இன்று அவரது பிறந்த இடமான சீதுவையில் அனுட்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எமது நாட்டில் 1994 ஆம் ஆண்டிலிருந்த 2005 ஆம் ஆண்டு வரை நல்லாட்சி நிலவியது. அதற்கு பின்னரான காலப்பகுதியில் சர்வாதிகார ஆட்சியின் உச்சகட்டமாகவே முன்னபள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சி காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த நல்லாட்சி துளிர்விட ஆரம்பித்துள்ளது.
சிறு மரமாக நாட்டப்பட்ட மரம் இன்று சுவைமிக்க கணிகளை தரும் மரமாகும் காலம் தற்போது உருவாகியுள்ளது. அவ்வாறான பிரதிபலனையே இன்று மூவின மக்களும் பெற்றுவருகின்றனர். மக்களுக்கு பயன்தரக்கூடிய ஆட்சியை அமைத்து கொடுப்பதே விஜயகுமாரதுங்கவிற்கு நாம் கொடுக்கும் கௌரவமாகும் என்றார்.
இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் விஜயகுமாரதுங்கவின் ஞாபகார்த்த வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்திருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அவர், விஜயவை நினைவு கூற மஹிந்தவுக்கு எதுவித தகுதியும் கிடையாது. அவர் உயிருடன் இருக்கும் வரை மஹிந்த அவருக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் தான் இருந்தார். மேலும் அவரின் மரணத்துக்கே வருகை தராத வர் எவ்வாறு ஒரு மனிதநேயவாதியாவார். விஜயகுமாரதுங்க மஹிந்தவை விட முற்றிலும் மாறுபட்டவர். அப்படிப்பட்ட ஒரு மனிதநேயவாதியை நினைவுகூற மஹிந்தவுக்கு எந்த வகையிலும் தகுதியானவர் இல்லை. ஏனெனில் மனித நேயம் என்றால் என்னவென்பதே மஹிந்தவுக்குத் தெரியாது என்றார்.