கிழக்கில் வலுவான முஸ்லிம் சக்தி உருவெடுத்து வருவதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கிழக்கு மாகாணத்திற்கு அழைத்து வருமாறு தினமும் தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் சிறு வியாபாரிகளின் வர்த்தக நிலையங்களை அகற்றும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொரளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில், எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க காலத்தில் இருந்து முஸ்லிம் தலைமைத்துவங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ஒன்றிணைந்து செயற்பட்டன.
ஆனால் தற்போது ஆட்சி பீடம் ஏறியுள்ள அரசாங்கம் கொழும்பில் உள்ள வியாபாரிகளின் வர்த்தக நிலையங்களை உடைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. பிரதமர் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் . முஸ்லிம் மக்களின் வாக்குகளை மறந்து விடக்கூடாது. மேலும் 600 ஏக்கர் காணியை சர்வதேசத்திற்கு கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் இடம்பெறுகின்றன.
எவ்வாறாயினும் தற்போது கிழக்கில் வலுவான புதிய முஸ்லிம் சக்தி உருவெடுத்து வருகின்றது.
அவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை அழைத்து வருமாறு தினமும் கோருகின்றனர் என்றார்.