Breaking
Sun. Dec 22nd, 2024

(நேர்காணல் : ஆர்.யசி)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சியை தக்கவைத்தோம். அதேபோல் இம்முறை பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசிய முன்னணியில் பலமான அரசாங்கத்தை அமைப்போம்.

நல்லாட்சியை தக்கவைத்து நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதே எமது இலக்காகும். அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ இந்த நாட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்ட தலைவர். அவரை நம்பி மீண்டும் களத்தில் இறங்குவது முட்டாள் தனமான செயலாகும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க கேசரிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.

அவரது செவ்வி வருமாறு,

கேள்வி :- இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியை அமைக்க முடியுமா?

பதில் :- நிச்சயமாக நாம் இம்முறை ஆட்சியமைப்போம். கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் நாம் மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுள்ளோம். அதேபோல் நாம் குறிப்பிட்ட விடயங்களை செய்து காட்டியுள்ளோம். எமது செயற்பாடுகளை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கலாம் ஆனால் மக்கள் விமர்சிக்கவில்லை. மக்கள் நல்லாட்சியை விரும்புகின்றனர். ஆகவே இந்தத் தேர்தலில் நல்லாட்சியின் பக்கமே மக்கள் செயற்படுவார்கள். அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது தலைமைத்துவத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக செயற்படுகின்றார்.

இருந்தாலும் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மத்தியில் நல்ல நிலைப்பாடு இல்லை. அதேபோல் மக்கள் நிராகரித்த, மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் தேர்தலில் பிரதான வேட்பாளராக களமிறக்கியிருப்பது மிகவும் மோசமானதொரு விடயமாகும். நாம் அந்தக் கட்சியில் இருந்திருந்தாலும் மஹிந்தவை களமிறக்க அனுமதித்திருக்க மாட்டோம். ஆகவே இம்முறை மஹிந்தவின் தோல்வி உறுதியானதொன்றாகும். அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தோல்வியும் நிச்சயமானது. ஆகவே நாம் இம்முறை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.

கேள்வி :- ஐக்கிய தேசிய முன்னணி என நீங்கள் குறிப்பிடுவது ஐக்கிய தேசியக் கட்சியை தானே?

பதில் :- நாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை அமைத்துள்ளோம். நாம் இப்போது எந்த கட்சியின் சாயலும் இல்லாது சுயாதீனமாக செயற்பட்டு வருகினோம். கடந்த காலங்களில் நாம் ஜாதிக ஹெல உறுமய கட்சியாக செயற்பட்டாலும் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்தில் தான் போட்டியிட்டோம்.

ஆனால் இம்முறை நாம் தேர்தல் வேட்புமனு தாக்கல் நெருங்கிய வேளையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறியதனால் எமக்கான தனித்த சின்னம் ஒன்றை தெரிவுசெய்ய முடியாமல் போனது. எனவே ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் நாம் இம்முறை தேர்தலில் போட்டியிட தீர்மானித்தோம். அதுமட்டுமல்லாது கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியை வீழ்த்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தான் சாதித்தோம். எனவே இம்முறை யானை சின்னத்தில் நாம் போட்டியிடுவது சிக்கலை ஏற்படுத்தாது. ஆனால் சின்னம் மட்டும் தான் பொதுவானதே தவிர நாம் சுயாதீனமான கட்சியாக உள்ளோம்.

கேள்வி :-எவ்வாறு இருப்பினும் தேர்தல் வாக்குப் பத்திரத்தில் யானை சின்னத்தில் நீங்களும் போட்டியிடுகின்றீர்கள். உங்களது வாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தானே சேரும்?

பதில் :-ஆம், ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச்செய்து நாட்டில் ஜனநாயகத்தை தக்கவைப்போம். ஆனால் இப்பொது இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியானது இத்தனை காலமும் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியாக அல்ல. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எவ்வாறு அனைத்துக் கட்சிகளையும் இணைத்து தேசிய அரசாங்கம் அமைத்தோமோ அதே போல் இம்முறையும் நாட்டுக்கு பொருத்தமான ஆட்சியை அமைக்க தயாராகியுள்ளோம். ஐக்கிய தேசிய முன்னணியில் பல கட்சிகளின் ஆதரவும் கொள்கைகளும் உள்ளன. எனவே இது தனித்த ஐக்கிய தேசியக் கட்சியாக கூறுவது பொருத்தமற்றதாகும்.

கேள்வி :- கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தவர்களில் நீங்கள் பிரதானமானவர்கள். அப்படி இருக்கையில் எவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்க முடிவெடுத்தீர்கள்?

பதில் :-நாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருக்கையில் நாட்டுக்கு பொருத்தமான பல நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். அப்போது எதிர்க்கட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் எமது செயற்பாடுகளை விமர்சித்தனர். இது சாதாரணமாக எதிர்க்கட்சியின் செயற்பாடாகும். ஆனால் நாட்டின் முக்கியமான தேவை ஒன்று ஏற்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சியின் உதவிதான் எமக்கு கைகொடுத்தது. நாட்டில் சர்வாதிகார சக்திகளின் பலம் அதிகரித்த போது அதை வீழ்த்த ஐக்கிய தேசியக் கட்சி தான் துணை வந்தது. ஆனால் நாம் ஐக்கிய தேசியக்கட்சியை முழுமையாக ஆதரிப்பதாக குறிப்பிடவில்லை. எமக்கும் முரண்பாடாக பல விடயங்கள் உள்ளன. அதேபோல் எதிர்க்க கூடிய சில சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தையும் சமாளித்து நாட்டுக்கு தேவையான ஆட்சியை எமது அழுத்தங்களின் துணையுடன் அமைப்போம்.

கேள்வி :-அப்படியாயின் மஹிந்தவை வீழ்த்தும் ஒரு நோக்கம் தான் ரணிலை ஆதரிக்க காரணமா?

பதில் :- இல்லை, யாரையும் தனிப்பட்ட முறையில் பழிவாங்க நாம் நினைக்கவில்லை. இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் நல்லாட்சி அனைவருக்கும் நன்மையாக அமைந்துள்ளது. அதேபோல் இந்த மக்களின் வாக்குகளினால் ஒரு தலைவர் நாட்டுக்கு தெரிவு செய்யப்படுவது மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளவே தவிர தனிப்பட்ட சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக அல்ல. எனவே நாம் மஹிந்தவை நிராகரிக்க மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம். இம்முறை நாம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல ஐக்கிய தேசிய முன்னணியில் கைகோர்த்துள்ளோம். நாட்டில் ஏற்பட்டிருக்கும் நல்லாட்சியை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் சர்வாதிகார குடும்ப அரசியல்வாதிகளின் கைகளில் நாட்டை கொடுப்பதை நாம் விரும்பவில்லை.

கேள்வி :-மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் பலம் அதிகரித்துள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா?

பதில் :-இல்லை, நான் அவ்வாறு கருதவில்லை. மஹிந்தவின் பலம் இப்போது முழுமையாக பறிபோயுள்ளது. ஆனால் அவர்களுக்கும் ஆதரவாக குறிப்பிட்ட சிலர் உள்ளனர். அது தவறும் இல்லை. ஹிட்லர் மிகக் கொடுமையானவர் என்பதை உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் ஹிட்லரை ஆதரிக்க ஒரு கூட்டம் உள்ளது. அதனை தவறென்று குறிப்பிட முடியாது. அதேபோல் தான் இப்போது மஹிந்தவும் உள்ளார். ஆனால் அவரால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியாது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு என்று ஒரு மக்கள் கூட்டம் உள்ளது. ஆனால் கடந்த முறை அவர்களின் வாக்குகளால் மஹிந்தவுக்கு ஆட்சியமைக்க முடியாது போய்விட்டது என்பதை மறந்துவிடக் கூடாது.

கேள்வி :-மஹிந்தவின் மீள் அரசியல் பிரவேசம் தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

பதில் :-மஹிந்த ராஜபக் ஷ கடந்த காலத்தில் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து படிப்படியாக முன்னேறி இறுதியாக ஜனாதிபதியாக இந்த நாட்டை 9 ஆண்டுகள் ஆண்டுள்ளார். குறிப்பாக இந்த நாட்டில் மிகவும் பலமான ஜனாதிபதியாக இருந்தவர். அதாவது நிறைவேற்று ஜனாதிபதிகளில் இவர் மட்டுமே மிகவும் அதிகமாக தனது அதிகாரங்களை பயன்படுத்திக்கொண்டுள்ளார். அவ்வாறான நிலையில் இருந்தவர் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். அவர் தோற்கடிக்கப் பட்டாலும் அவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்துள்ளதால் அவருக்கான சலுகைகள் அதிகமாகவே உள்ளன.

முன்னாள் ஜனாதிபதி என்ற கௌரவமும் அவருக்கு எப்போதும் உள்ளது. அவ்வாறான நிலையில் மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வருகின்றார். இது அவரது பதவி ஆசையை முழுமையாக வெளிப்படுத்துகின்றது. ஆனால் இனிமேல் ஒருபோதும் அவரால் அதிகாரத்துக்கு வரமுடியாது. இப்போது அவர் அரசியலில் இருந்து விடைபெற வேண்டும். இம்முறை அவர் பொதுத் தேர்தலில் களமிறங்குவது அவரது பலத்தினை முழுமையாக அழித்துக் கொள்ளும் செயற்பாடாகும்.

கேள்வி :-தேர்தலின் பின்னரும் ஐக்கிய தேசியக் கட்சியில் தான் அங்கம் வகிப்பீர்களா?

பதில் :-நாம் இப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான உறுப்பினர்கள் இல்லை. இம்முறை நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தை கடன் பெற்றுள்ளோம். தேர்தலின் பின்னர் அனைவரும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்போம்.
அதன்பின்னர் நாம் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பெயரில் தான் எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதேபோல் ஜாதிக ஹெல உறுமயவும் இருக்கும்.

எமக்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படுவது எவ்வித சிக்கலையும் ஏற்படுத்தாது என்று நினைகின்றோம் .

Related Post