பத்து வருடங்களாக அரச அதிகாரத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தற்போது எம்.பி. பதவியை ஏற்று சாதாரணமாக இருக்கிறார். அவ்வாறான நிலையில் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுகளை ஏற்பதில் என்ன பிரச்சினை உள்ளது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார்.
இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான பதவி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சுப் பதவிகள் பங்கீட்டில் பாரிய இழுபறி நிலை காணப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் யார் யாருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது என்பதில் சிக்கல் நிலவியமையால் தீர்மானம் எடுக்கமுடியாதிருந்தது. என்னைப் போன்றே ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த சில வாரங்களாக இது தொடர்பில் தீர்மானம் எடுக்கமுடியாது சிக்கலில் இருந்தார்.
இந்நிலையில், வழங்கப்பட்ட அமைச்சுகள் தொடர்பில் சிலருக்குத் திருப்தி இல்லாமல் இருக்கலாம். 10 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும் என்றால், அமைச்சுப் பதவிகளில் இருந்தவர்களுக்கு இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுகளை ஏற்பதில் என்ன சிக்கல் உள்ளது? அனைவரும் நாட்டின் நலன் கருதி செயற்படவேண்டும். நாங்கள் வழங்கியுள்ள அமைச்சுகளின் மூலம் எதிர்ப்பார்த்த இலக்கை அடையவேண்டும் என்றார். இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான சஜித் பிரேமதாஸஇ தயா கமகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.