முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னிலைப்படுத்தி வெற்றி பெறுவதற்கு சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை. அம் முயற்சியை தகர்த்து தவிடுபொடியாக்குவோம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பஷில், கோத்தபாய என ராஜபக்ஷவினர் தொடர்பாக மக்கள் மத்தியில் காணப்பட்ட வீரர்கள் என்ற மாயைக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டி அவர்களை சிறிய மனிதர்களாக்கியுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி தொடர்பான அமைச்சர் சம்பிக ரணவக்க மேலும் தெரிவித்திருப்பதாவது,வடக்கின் ஆளுனராக பதவி வகித்த மேஜர் ஜெனரல் சந்திரசிறி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை தடுக்க முனைந்தார்.
அரச அதிகாரியான அவர் தனது கடமைகளை மறந்து அரசியலில் ஈடுபட்டார். இது கவலைக்குரிய விடயம். எனவே பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டமை நியாயமானதாகும்.கோத்தபாய, பஷில் மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினர் வீரமிக்கவர்கள் என்ற மாயை நாட்டு மக்கள் மத்தியில் பரப்பப்பட்டிருந்தது. அவையனைத்தையும் கடந்த தேர்தலில் மக்கள் தகர்த்து தவிடு பொடியாக்கி விட்டனர்.
மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக ஒரு விடயத்தை கூற வேண்டும்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில அதிகாரிகளை அலரிமாளிகையை பார்வையிடுவதற்காக அனுப்பி வைத்துள்ளார்.அதன் போது அங்கு கைவிடப்பட்ட நாயொன்று ஒரு அறைக்குள் இருந்து குரைத்துக் கொண்டு வெளியே வந்துள்ளது.பின்னர் அந்நாய்க்கு உணவு வழங்கி கூடொன்றில் அடைத்து வைத்துள்ளனர்.
இதேபோன்று தான் மஹிந்த அடுத்த தேர்தலில் போட்டியிடுவார். வெற்றி பெறுவார். பிரதமராவார் எனக் கூறுபவர்களும் மேற்கண்ட கைவிடப்பட்ட நாய்களைப் போன்றவர்களே ஆவார்கள்.இந்த முயற்சிகள் ஒரு போதும் வெற்றியளிக்கப் போவதில்லை.
நான் சவால் விடுகிறேன். முடிந்தால் தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தையாவது வெற்றி பெற்றுக் காட்டட்டும்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் எவ்விதமான பிரச்சினையும் தலைதூக்காது.
எமக்கிடையே உடன்பாடு உள்ளது. பெரும்பான்மை எம்.பி. க்களை கொண்டவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்பதாகும்.அதிக எண்ணிக்கை ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்குமானால் அவருக்கு பிரதமர் பதவி கிடைக்கும்.
தற்போதைய இடைக்கால அரசில் அவர் பிரதமராக பதவி வகிக்கின்றார்.பொதுத்தேர்தலில் அதிக எம்.பி.க்களை பெறுபவருக்கு பிரதமர் பதவியும் அதற்கு அடுத்த படியாகவுள்ளவருக்கு பிரதிப்பிரதமரும் வழங்கப்படும்.
பிரிவினை வாதத்தை பிரசாரம் செய்து மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு ராஜபக் ஷவும் அவரது சகோதரர்களும் மேற்கொள்ளும் முயற்சிகள் எதுவும் வெற்றி பெறப் போவதில்லை.தேசிய பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கப்படும். பிரிவினை வாதம் தலைதூக்க இடமளிக்கமாட்டோம்.மக்களின் சுதந்திரத்தை மதிக்கின்றோம்.
ஆனால் அதற்குள் மறைந்து கொண்டு அடிப்படை வாதம் பிரிவினை வாதத்தை விதைப்பதற்கு இடமளிக்க மாட்டோம் என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
-Verakesari-