முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதால் முஸ்லிம்கள் அவரை மன்னித்துவிட்டார்கள்.
பொதுத்தேர்லில் அவர் தரப்பில் போட்டியிடுவதற்கு பல முஸ்லிம்கள் முன்வந்திருக்கின்றமை இதனை உறுதிசெய்கிறது என முன்னாள் முஸ்லிம் சமயவிவகார அமைச்சர் எ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் முஸ்லிம்களின் வகிபாகம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்ததாகவும் பொதுபலசேனாவின் முஸ்லிம் எதிர் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை எனவும் துத்திரிகள் கோஷமிட்டார்கள். துத்திரிகள் ஒரு போதும் ஆலமரமாகப் போவதில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக் ஷவுக்கும் ஐ.ம.சு. கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்க தீர்மானித்திருக்கின்றமை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை கூறுபோட நினைத்திருந்த சியோனிசவாதிகளுக்குப் பிடிக்கவில்லை. நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு மக்கள் ஆணை பெற்ற ஜனாதிபதியே மஹிந்தவை இணைத்துக் கொண்டு அரசியல் பயணத்தை தொடர தீர்மானித்துள்ளார்.
சிறுபான்மை சமூகத்தின் நலனில் அக்கறைக் கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன மஹிந்தவை ஏற்றுக்கொண்டுள்ளதால் முஸ்லிம்கள் எவ்வித அச்சமும்கொள்ளத் தேவையில்லை. பொதுத் தேர்தலின் பின்பு அமையவுள்ள அரசாங்கத்தில் மஹிந்த மைத்திரிபாலவின் ஆலோசனைகளுக்கமைவாகவே செயற்படுவார்.
தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பொதுபலசேனாவினாலே செயற்படுத்தப்பட்டன. அதில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு சம்பந்தமில்லை என்பதை முஸ்லிம்கள் இன்று உணர்ந்துவிட்டார்கள் .
இதனை மஹிந்தவும் பகிரங்கமாகவே கூறியிருக்கிறார். இதனால் இன்று முஸ்லிம்களின் மனநிலையில் மாற்றமேற்பட்டுள்ளது என்றார்.
-Vidivelli-