நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை தொடர்ந்தும் நம்புவது ஆபத்தானது என முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனக்கு நெருக்கமான, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
புதிய கட்சியை ஒன்றை ஆரம்பிப்பதா இல்லை என கலந்துரையாடி அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஸ நியமித்த கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 9 பேர் அடங்கிய குழுவில் இருந்து, குமார வெல்கமவை மகிந்த நீக்கியுள்ளார்.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது ஆண்டு விழா மாநாட்டின் வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சியின் மத்திய செயற்குழு கூடிய போது, கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் குமார வெல்கமவும் அதில் கலந்து கொண்டார்.
மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்த மக்களின் எண்ணிகையை விட இரண்டு மடங்கு அதிகமான மக்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என உறுதியாகியுள்ளதாக மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் கலந்து கொள்ளும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக ஒதுக்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதால், மேலும் ஆயிரம் பஸ்களை பெற்றுக்கொள்வது எனவும் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.