Breaking
Fri. Nov 15th, 2024

அர­சாங்­கத்­தினால் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­ 725 பாரிய ஊழல் மோச­டிகள் தொடர்பில் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த 725 மோச­டி­க­ளுடன் முன்னாள் ஜனா­தி­ப­தியின் குடும்­பத்­தாரும் உற­வி­னர்­களும் மறை­மு­க­மாகத் தொடர்­பு­பட்­டி­ருக்­கின்ற அதே­வேளை இவற்றில் 25 மோச­டி­களில் மஹிந்த குடும்­பத்­தாரின் நேரடித் தொடர்­புகள் இருக்­கின்­றன. இதற்­கான ஆதா­ரங்­கள் உள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரிவித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நெல்சன் மண்­டே­லா­வா­கவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை லீகுவான் கி வாகவும் இன்று வர்­ணித்துக் கொண்­டி­ருக்­கின்ற சர்­வ­தேசம் மைத்­தி­ரி­பா­லவின் ஜன­நா­யக ஆட்­சி­யையும் ரணிலின் பொரு­ளா­தார நோக்­கையும் வியந்து பாராட்­டு­கின்­றது என்றும் அவர் கூறினார்.

இதே­வேளை எத்­தனை காலம் எடுத்­தாலும் மேலே குறிப்­பிட்ட மோச­டி­யா­ளர்­களை விட்­டு­வைக்கப் போவ­தில்லை.இன்­றைய அர­சாங்கம் யாருக்­கா­கவும் எவ­ரி­டத்­திலும் மண்­டி­யிடப் போவ­து­மில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷ மற்றும் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்தபாய ராஜபக் ஷ ஆகியோர் புலிகள் அமைப்பின் பிர­தா­னி­க­ளான கே.பி., தர்­ம­லிங்கம் யோகேஸ்­வரன் உள்­ளிட்ட பல­ருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்­ப­டங்­க­ளையும் சபையில் காட்­சிப்­ப­டுத்­தினார்.

பாரா­ளு­மன்றம் நேற்று புதன்­கி­ழமை காலை 9.30 க்கு பிரதி சபா­நா­யகர் திலங்க சுமத்­தி­பால தலை­மையில் கூடி­யது. சபையின் பிர­தான நட­வ­டிக்­கை­களின் பின்னர் இடம்­பெற்ற 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் 9 ஆம் நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் மங்கள சமரவீர மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இதன்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் சபையில் சமூ­க­ம­ளித்­தி­ருந்தார்.

இங்கு அமைச்சர் மங்­கள சம­ர­வீர தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

2014 நவம்பர் மாதம் 21 ஆம் திக­தி­யா­னது இந்­நாட்டின் புரட்­சிக்­கான ஒரு யுகத்தின் நாளாக அமைந்­தி­ருந்­தது. அன்­றைய தினம்தான் இன்­றைய எமது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கொழும்பு புதிய நகர மண்­ட­பத்தில் தோன்றி தானே ஜனா­தி­பதித் தேர்­தலை சந்­திக்­கின்ற எதிர்க்­கட்­சி­களின் பொது வேட்­பாளர் என்­பதை அறி­வித்தார். அவ­ருடன் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டார நாயக்க குமா­ர­துங்க இணைந்­தி­ருந்­த­மை­யையும் இங்கு நினை­வூட்டிக் கொள்­கிறேன்.

அந்த வர­லாற்றுப் புரட்­சியின் ஒரு­கால பூர்த்­தியில் தான் எமது அர­சாங்­கத்தின் முத­லா­வதும் வெற்­றி­க­ர­மா­ன­து­மான வரவு செலவுத் திட்டம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­னைய அர­சாங்­கத்தின் ராஜபக்ஷ நிர்­வா­கத்­தினால் சாதிக்க முடி­யாத பல விட­யங்­களை நாம் 100 நாள் ஆட்­சிக்­கா­லத்தில் சாதித்துக் காட்­டி­யி­ருந்தோம். அத்­தி­யா­வ­சியப் பொருள் விலைக்­கு­றைப்பு முதல் பல்­வேறு நிவா­ர­ணங்­க­ளையும் நாம் பெற்றுக் கொடுத்­தி­ருந்­ததை மறுக்க முடி­யாது.

2010 இல் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலின் போது மஹிந்த ராஜபக் ஷ தனது மார்பில் அடித்துக் கொண்டு அரச ஊழி­யர்­க­ளுக்கு 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை பெற்றுத் தரு­வ­தாகக் கூறனார். ஆனால் அது இது­வரை நிறை­வே­ற­வில்லை. எனினும் நாம் முன்­வைத்த உறு­தி­மொ­ழி­களை செவ்­வனே நிறை­வேற்­றி­ருக்­கின்றோம்.

இந்தப் பாரா­ளு­மன்­றத்தில் குரோ­தத்­தன்மை காட்­டப்­பட்டு வரு­கின்­றது. எமது ஜனா­தி­ப­திக்கு எதி­ரா­கவும் பிர­த­ம­ருக்கு எதி­ரா­கவும் இணைய தளங்­க­ளிலும் ஊட­கங்­க­ளிலும் மிகவும் மோச­மா­னதும் கீழ் மட்­டத்­தி­லா­ன­து­மான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எனினும் இவ்­வாறு விமர்­சனம் முன்­வைக்­கப்­ப­டு­கின்­ற­மைக்­காக நாம் எவ­ரையும் நான்காம் மாடிக்கு அழைத்துச் செல்­ல­வில்லை. வெள்ளை வேன் இப்­போது கிடை­யாது. பூர­ண­மான ஊடக சுதந்­தி­ரமும் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

எமது அர­சாங்­கத்­துக்கு இழுக்கு ஏற்­பட்டு விடக்­கூ­டாது என்ற கார­ணத்தை பிர­தா­னப்­ப­டுத்தி உறுப்­பினர் திலக் மாரப்­பன தனது அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­தி­ருந்தார். இது 28 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் இடம்­பெற்­றுள்ள சிறந்த முன்­னு­தா­ர­ண­மாகும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்று 10 மாதங்­களே நிறை­வ­டைந்­துள்­ளன. எமது தேசிய அர­சாங்கம் அமை­யப்­பெற்று நான்கு மாதங்­களே ஆகின்­றன. அதே­போன்று வரவு செலவுத் திட்டம் சமர்ப்­பிக்­கப்­பட்டு 12 தினங்­களே நிறை­வ­டைந்­துள்­ளன.

இப்­ப­டி­யான நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்­நாட்­டுக்கு சிறந்த ஜன­நா­ய­கத்தைப் பெற்றுக் கொடுத்­துள்ள தலை­வ­ராக திகழ்­கின்ற அதே­வேளை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­நாட்டின் சிறந்த எதிர்­கால பொரு­ளா­தார நோக்­கினைக் கொண்டு செயற்­பட்டு வரு­கிறார். இந்த இரு தலை­வர்­களின் நிலைப்­பா­டு­க­ளையும் கொள்­கை­க­ளையும் இலக்­கு­க­ளையும் இன்று சர்­வ­தேசம் நன்கு உணர்ந்து புரிந்து கொண்­டு­முள்­ளது ஏற்­றுக்­கொண்­டு­முள்­ளது.

அந்த வகையில் நாம் சர்­வ­தே­சத்தை வெற்றிக் கொண்­ட­வர்­க­ளாக இருக்­கின்றோம். ஆதலால் தான் சர்­வ­தேச விசா­ரணை என்­ப­தற்குப் பதி­லாக உள்­ளக விசா­ர­ணைக்­கான ஏது­நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

நாடு காட்டிக் கொடுக்­கப்­ப­டு­வ­தா­கவும் தாரை வார்க்­கப்­ப­டு­வ­தா­கவும் இங்கு எதிர்க்­கட்­சி­யினர் குற்றம் சாட்­டு­கின்­றனர். எனினும் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம் யாருக்­கா­கவும் எவ­ரி­டத்­திலும் மண்­டி­யிட்டு விடப்­போ­வது கிடை­யாது.

மஹிந்த ராஜபக் ஷவின் நிர்­வா­கத்தின் போது எமது நாட்­டையும் வளங்­க­ளையும் சொத்­துக்­க­ளையும் கொள்­ளை­யிட்­ட­வர்­களின் தக­வல்கள் தர­வுகள் தற்­போது வெளி­வந்து கொண்­டி­ருக்­கின்­றன.

அரச நிதிகள் சூறை­யா­டப்­பட்­டி­ருக்­கின்­றன. இங்­கி­லாந்து, உக்ரேன், டுபாய், சீசெல்ஸ் ஆகிய நாடு­க­ளிலும் இன்னும் சிறு சிறு தீவு­க­ளிலும் கூட வங்கிக் கணக்­குகள் இருக்­கின்­றன. இவ்­வாறு 725 பாரிய ஊழல் மோச­டிகள் பதி­வா­கி­யுள்­ளன. இந்த 725 பாரிய மோச­டி­க­ளிலும் ராஜ­பக்ஷ குடும்­பத்­தி­னரின் சிறியோர் முதல் பெரியோர் வரை­யிலும் இன்னும் அவர்­க­ளது உற­வி­னர்­களும் மறை­முக தொடர்­பு­களைக் கொண்­டி­ருக்­கின்ற அதே­வேளை 25 பாரிய ஊழல் மோச­டி­களில் மஹிந்த ராஜபக் ஷவின் குடும்­பத்தார் நேர­டி­யா­கவே தொடர்­பு­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

இவை தொடர்­பான விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. மேலும் எமது வெளி­நாட்­டுக்­கொள்கை சிறந்த முறையில் பேணப்­பட்டு வரு­வதால் மேற்­படி மோச­டி­களை கண்­டுப்­பி­டித்தல் தொடர்­பான விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளுக்கு மேற்­படி நாடு­களின் ஒத்­து­ழைப்­புகள் கோரப்­பட்­டி­ருக்­கின்­றன.

பிற்­பொக்­கட்­கா­ரனைக் கைது செய்­வது போன்று இவ்­வி­ட­யத்தில் செயற்­பட முடி­யாது. அனைத்து விசா­ரணை நட­வ­டிக்­கை­களும் முறை­யாக இடம்­பெறும். அத்­துடன் காலம் எடுத்­தாலும் குற்­ற­வா­ளி­களை நாம் விட்டு வைக்­க­மாட்டோம்.

மோல்ட்­டாவில் இடம்­பெற்ற பொது­ந­ல­வாய நாடு­களின் அரச தலை­வர்­க­ளது மாநாட்டில் கலந்து கொண்­டி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­திப்­ப­தற்கு சர்­வ­தேச நாடு­களின் தலை­வர்கள் முண்­டி­ய­டித்துக் கொண்­டி­ருந்­தனர்.

அத்­துடன் அவ­ருடன் புகைப்­படம் எடுத்துக் கொள்­வ­தற்கு பெரும் ஆவல் கொண்டு காணப்­பட்­டதை அவ­தா­னிக்க முடிந்­தது. அதே­போன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­யிடம் எமது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் நலத்­தையும் விசா­ரித்துக் கொண்­டனர். இது எமது தலை­வர்­களின் நிலை­மை­யாகும்.

மேலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நெல்சன் மண்­டே­லா­வா­கவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை லீ குவான் இ வாகவும் சர்­வ­தேசத் தலை­வர்கள் வர்­ணித்து போற்­று­கின்­றனர்.

எமது அர­சாங்கம் சீனா­வுடன் விரி­சலைக் கடைப்­பி­டித்து வரு­வ­தாக எதிர்க்­கட்சி குற்றம் சாட்­டு­கி­றது. சீனா­வு­ட­னான எமது உறவில் எந்த விரி­சலும் கிடை­யாது. நாம் சிறந்த உற­வையே பேணி வரு­கிறோம்

சீனாவுடனான உறவுகள் பேணபட்டு வருகின்ற அதேவேளை நாம் அமெரிக்காவுடனும் சிநேகபூர்வத்தை கடைப்பிடித்து வருகிறோம். அதேபோன்று தான் ரஷ்யாவுடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் கூட எமது உறவு பலமாகவே இருக்கின்றது.

இதேவேளை புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கம், நபர்கள் மீதான தடை நீக்கம் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எம்மீது குற்றம் சாட்டுகிறார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ ஆகியோரே புலிகள் அமைப்பின் பிரதானிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளனர். 2014 ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி எடுக்கப்பட்ட புகைப்படங்களே இவையென சில புகைப்படங்களை அமைச்சர் மங்கள சமரவீர சபையில் காட்டினார். அத்துடன் இப்படங்களை பிரேம் செய்து தினேஷ் குணவர்தனவுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று கூறினார்.

By

Related Post