Breaking
Thu. Dec 26th, 2024

போரை வெற்றி கொண்டதாகத் தம்பட்டமடித்த முன்னைய அரசு அதன் பலாபயனை மக்களுக்குப் பெற்றுத்தரவில்லை.

நாட்டை பெரும் கடனில் மூழ்கடித்துச் சென்றுள்ளது இவ்வாறு குற்றஞ்சாட்டினார்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
“போர் நிறைவுபெற்று ஆறு ஆண்டுகளின் பின்னர் தேர்தல் தோல்வியையடுத்து வீடு சென்ற முன்னைய ஆட்சியாளர்கள் திறைசேரியை வங்குரோத்து நிலையில் விட்டுச்சென்றுள்ளனர்.
அத்துடன் நாட்டைப் பத்தாயிரம் கோடி அமெரிக்க டொலர் கடனாளியாக்கிச் சென்றுள்ளனர். அதுமட்டுமன்றி ஒப்பந்தகாரர்களுக்கு மேலும் பத்தாயிரம் கோடி அமெரிக்க டொலரைப் பாக்கியாக கடந்த அரசு விட்டுச் சென்றுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இது மிகப்பெரிய  தவறாகும். தற்போதேனும் போர் வெற்றியின் பயனை இந்த நாட்டுமக்களுக்குப் பெற்றுக் கொடுக்கவேண்டும். ஆனால்,  அதனைப் பெற்றுக்கொடுப் பதற்கு நடப்பு அரசுக்கு முன்பாக பெரும் சவால் உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ரணவிரு சேவா அதிகாரசபையால் நேற்றுப் பத்தரமுல்லையிலுள்ள அபே கமவில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த படைவீரர்களின் தாயாருக்கான நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“கடந்த காலத்தில் போர் தொடர்பாகவும் போர் வெற்றி தொடர்பாகவும் பெருமை பாடித் திரிந்த கூட்டமொன்றிருந்தது ஆட்சியாளர்கள் இருந்தனர். நாட்டுக்காக உயிர்துறந்த ஆயிரக்கணக்கான படையினரையும் அவர்களுக்குத் தலைமைத்துவம் கொடுத்த தளபதிகளையும் விட்டுவிட்டு  நான்தான் போரை வென்றேன் என்று தம்பட்டமடித்தனர்.
இந்த நாட்டிற்கு மீண்டும் சுதந்திரத்தைப் பெற்றுத்தருவதற்காகவும், உங்கள் பிள்ளைகளுக்கு அச்சமும் சந்தேகமுமற்ற நாட்டை உருவாக்கித் தருவதற்காகவுமே உங்களுடைய பிள்ளைகளும் கணவன்மாரும் உயிர்துறந்தனர்.
போர் வெற்றிகொள்ளப்பட்டது. நிச்சயமாக தெளிவாக வெற்றிகொள்ளப்பட்டது. பயங்கரவாதம் வேரறுக்கப்பட்டது. ஆனால், அதன் பிரதிபலன் யாருக்குக் கிடைத்தது.
எமது பிள்ளைகள் போரின்போது வீரத்துடன் போராடியதும் தமது உயிரை மாய்த்துக்கொண்டதும் அந்த சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வறுமையில் இருந்தும், பட்டினியில் இருந்தும் ஊழலில் இருந்தும் அச்சுறுத்தலில் இருந்தும் சுதந்திரமாக வாழ்வதற்காகவே.” என்று அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.
“2009ஆம் ஆண்டு போர் வெற்றிகொள்ளப்பட்ட போதும் அதனால் எந்தவொரு சுதந்திரமும் எமக்குக் கிடைக்கவில்லை. கடந்த ஆறுவருடங்களாக படிப்படியாக இருந்த சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டது. ஒரு குடும்பம் மாத்திரமே அந்தச் சுதந்திரத்தை அனுபவித்தது.
அந்த குடும்பத்தைச் சூழ்ந்திருந்த கூட்டம் மட்டுமே அதனை அனுபவித்தது. போர் நிறைவுபெற்றதும் நாடொன்றில் கோடிக்கணக்கான நிதி திறைசேரியில் மிச்சமாகும்.
போரை வென்ற ஆட்சியாளர்கள் ஆறு வருடகாலத்தின் பின்னர் வீட்டிற்கு சென்றபோது திறைசேரிக்கு முற்றுமுழுதாக “பட்டை’ போட்டுச்சென்றனர் (வங்குரோத்துநிலைக்கு தள்ளிவிட்டுச் சென்றிருந்தனர்.)
எங்கே அந்த நிதி? இவர்கள் காரணமாக எமது நாடு இன்று ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர் கடனாளியாக மாறிவிட்டுள்ளது. ட்ரில்லியன் டொலர்கள் என்பது பத்தாயிரம் கோடி டொலர்களாகும். இலங்கை நாணயத்தில் பார்ப்பதென்றால், பத்தாயிரம் கோடிகளை 133 ரூபாவால் பெருக்க வேண்டும்.
போர் வெற்றியின் பலாபலன் எங்கே? யாருக்கு அந்தப் பலன்கள் கிட்டின? பொருள்களின் விலைகள் குறைந்திருக்கின்றனவா? அரச ஊழியர்களின் ஊதியம் அதிகரித்திருக்கின்றதா? இன்னமும் அதிகமானவர்களுக்கு நல்ல வேலை கிடைத்திருக்கின்றதா? இல்லையே.
ஒரு ட்ரில்லியன் டொலரால் நாட்டை கடனாளியாக்கிச் சென்ற முன்னைய ஆட்சியாளர்கள் மற்றுமொரு ட்ரில்லியன் டொலரால் அதாவது, பத்தாயிரம் கோடி டொலர்களை ஒப்பந்தக்காரர்களுக்குப் பாக்கியாக விட்டுச்சென்றுள்ளனர்.
வீதிகளையும் வடிகாலமைப்புகளையும் செய்வதற்கு ஒப்பந்தத்தைக் கொடுத்துவிட்டு பணத்தைக் கொடுக்காது சென்றுள்ளனர்.  அதனையும் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் தற்போதைய அரசின் மீதே சுமத்தப்பட்டுள்ளது.”‡ என்றும் அவர் தெரிவித்தார்.
“அரசின் திறைசேரியில் பணத்தைப் பெற்று தமது பொக்கட்டுகளை நிரப்பிக்கொண்டனர். இது மிகப்பெரும் தவறாகும். போர் தொடர்பில் தம்பட்டம் அடித்து பாடித் திரிந்தவர்கள் அந்தப் பயனை இந்த நாட்டின் மக்களுக்கோ எதிர்காலப் பயணத்திற்கோ பெற்றுத்தரவுமில்லை விட்டுச்செல்லவுமில்லை.
அதுதான் மிகப்பெரிய தவறாகும். நான்தான் போரை வெற்றிகொண்டவன் என சிலர் தமது கிராமங்களில் சென்று கூச்சலிடுகின்றனர். தேர்தல் தோல்வியடைந்தும் மீண்டும் அதிகாரத்திற்கு வரும் பேராசையில் இப்படிச் செய்கின்றனர்.
உங்களுடைய பிள்ளைகளே போரை வென்றனர். நானும் இந்த நாட்டை 11 வருடங்கள் ஆட்சிசெய்தேன். நான் எப்போதும் தேர்தலில் தோற்கவில்லை. நான் இரு தவணைகளை முடித்துக்கொண்டு எனது தாய்,  தந்தை என்னுள் விதைத்த விழுமியத்திற்கு அமைவாக வீட்டுக்குப் போனேன்.
ராஜபக்­ச செய்ததைபோன்று சட்டத்தை மாற்றி இன்னமும் பல தடவைகள் ஆட்சியில் இருக்க முயற்சிக்குமாறு என்னோடிருந்த பலரும் எனக்கு ஆலோசனை கூறினர். நானோ,  “சீ இது என்ன கெட்ட வேலை” எனக் கூறினேன்.
நான் ஒரு ஜனநாயகவாதி. இரு தடவைகள் ஆட்சியில் இருந்தேன். அது போதும் என அந்த யோசனைகளை நிராகரித்து வீடுசென்றிருந்தேன். எனக்குத் தேவையாக இருந்திருப்பின் பணத்தைக் கொடுத்து சாராயத்தைக் கொடுத்து சோற்றுப்பார்சல்களைக் கொடுத்து இவர்கள் கொண்டுவந்தது போன்று ஆயிரம் மடங்கு மக்களைக் கொண்டுவந்திருக்க முடியும். அப்படி கெட்டவேலை செய்ய எனக்கு முடியாது. அந்த எண்ணம் என்னுடைய எண்ணத்திலோ உடலிலோ கிடையாது.
என்ன இந்த விளையாட்டு?
போரை வென்றார்கள். தேர்தலில் அந்தக் கூட்டம் தோல்வியடைந்துள்ளது. இன்னுமொரு தரப்பினர் வெற்றிபெற்றுள்ளனர். நாட்டிலிருந்த கள்ளத்தனம், ஊழல்,  கொலைக்கலாசாரம், சுதந்திரத்தைப் பறித்தெடுத்தல், மக்களுக்கு சுதந்திரமில்லாமை ஊடக சுதந்திரம் இன்மை போன்ற காரணங்களால் இவை மீண்டுமாக தமக்கு வேண்டும் என இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் தேர்தலில் தமக்கு விரும்பிய தரப்பினரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்த அரசிற்கு அதன் வேலையை முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்கின்றார்களில்லை.” என்றும் அவர் தெரிவித்தார்.
“தற்போதேனும் போர் வெற்றியின் பயனை இந்த நாட்டுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால், அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு எமக்கு முன்பாக பெரும் சவால் உள்ளது. ஒரு பக்கத்தில் அரச அதிகாரிகள். முதலில் அரசியல்வாதிகளைக் குறிப்பிடவேண்டும்.
ஆம். நாடாளுமன்றத்திலிருந்து மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் என அனைத்து தரப்பிலும் ஊழல் தலைவிரித்தாடுகின்றது. நீ ஐம்பது வீதம் எடுக்காமல் கொமி­ன் பெறாமல் அதனைச் செய்யவேண்டாம் என்று பெரிய பதவிகளிலுள்ளவர்கள் கூறுகின்றனர்.
பிரதேச சபையினரோ நூற்றுக்கு 20 வீதம் கொமி­ன் எடுக்கும்படி நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். மேலிருந்து கீழ்வரை ஊழல் தலைவிரித்தாடுகின்றது. பிரதேச சபை,  மாகாண சபை, நாடாளுமன்றம் என அனைத்துத் தரப்பினருமே கள்வர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் நாட்டை முன்னெடுத்துச் செல்வது எவ்வாறு?” எனவும் அவர் கேள்வியயழுப்பினார்.

Related Post