ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதியின் நிபந்தனைகளையோ கட்சியின் கொள்கைகளையோ மீறி செயற்படவில்லை. எனவே ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொள்ளவும் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடவும் மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சி யின் அனைத்து உறுப்பினர்களும் வெள்ளிக்கிழமை விசேட சந்திப்பை நடத்த உள்ளனர்.
ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு தென்கொரியா சென்றுள்ள மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான குழு நாளை வியாழக்கிழமை நாடு திரும்புகின்றது. தென்கொரியாவில் வாழும் இலங்கையர்களை சந்தித்து நாட்டில் தற்போதுள்ள நிலைமைகள் தொடர்பில் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டதுடன் அந்நாட்டு தலைவர்களையும் இந்த குழு சந்தித்திருந்தது.
மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, லொஹான் ரத்வத்த, பியல் நிஷாந்த மற்றும் செஹான் சேமசிங்க ஆகியோர் தென் கொரியாவிற்கு சென்றிருந்தனர்.
கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிய கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர் கொள்ள கூட்டு எதிர்க் கட்சியினர் தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு போதும் நிறுத்தப்போவதில்லை. தேசிய மட்டத்திலும் மாகாண மற்றும் மாவட்ட மட்டத்திலும் மக்கள் போராட்டங்களை நடத்தி வலுவான எதிர்ப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட உள்ளன. ஆகவே முக்கியமான சில தீர்மான ங்களை எடுப்பதற்காக மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் வார இறுதியில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.