அரசியல்,பொது மேடைகளில் இருவரும் சராமரியாக விமர்சனக்கணைகளைத் தொடுத்துவருகின்றனர். பதிலடிகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன.
மஹிந்தவின் அமைச்சரவையில் இருந்து மைத்திரிபால சிறிசேன வெளியேறி பொதுவேட்பாளராக களமிறங்கியது முதல் இருவருக்குமிடையில் சொற்போர் வெடிக்கத் துவங்கியது. எனினும், பகிரங்கமாக – வெளிப்படையாக விமர்சனம் முன்வைக்கப்படவில்லை.
‘முன்னாள் ஆட்சியாளர்கள்’ என்ற சொற்பதத்தை பயன்படுத்தி மைத்திரியும், ‘முட்டை அப்பம்’ கதையைக்கூறி மஹிந்தவும் நேரடியாக அன்றி மறைமுகமாகவே தாக்குதல்களை நடத்திவந்தனர்.
ஆனால், யோஷித ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டதையடுத்து மைத்திரியை முழுமையாக இலக்குவைத்து மஹிந்த சொற்கணை தொடுக்க ஆரம்பித்துள்ளார். இதற்கு மைத்திரியும் அதிரடியாகப் பதிலடி கொடுத்து வருகின்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பில் நடந்த கூட்டத்தின்போது, “நான் கட்சியின் தலைவர் பதவியை தியாகம் செய்யவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பயன்படுத்தி அவர் பறித்தெடுத்தார். தலைமைத்துவம் என்பது கட்சியின் பலகைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட விடயமாக இருக்கக்கூடாது’’ என்று கடும் சீற்றத்துடன் உரையாற்றியிருந்தார் மஹிந்த.
அதற்கு முன்னர் நடைபெற்ற கூட்டமொன்றின்போது, முன்னாள் ஆட்சியாளர் செய்த பாவத்தை நாம் கழுவிக்கொண்டிருக்கிறோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே மஹிந்தவின் உரை அமைந்தது.
அத்துடன், ஐ.நா. தீர்மானத்துக்கு ஜனாதிபதியும், பிரதமரும் ஆதரவு வழங்கியுள்ளமை 1815 ஆம் ஆண்டு காட்டிக்கொடுப்புபோன்றதாகும் என்றும் அண்மையில் அறைக்கையொன்றை விடுத்திருந்தார் மஹிந்த. இதற்கு மறுநாளே பதிலடி
கொடுத்தார் மைத்திரி. “உடன்படிக்கையை முழுமையாக வாசிக்காது, முன்னாள் ஆட்சியாளர் உளறுகிறார். மின்சாரக் கதிரையிலிருந்து அவரை நாம்தான் காப்பாற்றியுள்ளோம்” – என்றார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மஹிந்த, “தற்போது அணுஅணுவாக எனக்குத் தண்டனை வழங்கப்படுகின்றது. உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்துகின்றனர். இவ்வாறு என் மீது தொடர் அழுத்தங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக, மின்சார நாற்காலிக்கு அனுப்புவதே மேல்” என்று கூறியிருந்தார்.
இவ்வாறு இருவருக்குமிடையில் சொற்போர் தொடர்ந்தவண்ணமுள்ளன.