Breaking
Sun. Dec 22nd, 2024

இது பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் தருகையில் அவர் கூறியதாவது,
அமைச்சர் ரிசாத் பதியுதீன் தன்னை மன்னித்துக்கொள்ளும்படி உலமா கட்சித்தலைவர் மூலம் சொல்லியனுப்பியதாக சிலர் குறிப்பிட்டுள்ளமை மிகப்பெரிய அபாண்டமாகும். இவ்வாறு மஹிந்த பற்றி எத்தகைய கருத்தையும் இன்று வரை என்னிடம் அமைச்சர் ரிசாத் பேசவேயில்லை என்பதை இறைவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன்.

உண்மையில்; அமைச்சர் ரிசாத் பதியுதீன் பண்பட்ட, நல்ல அரசியல் சிந்தனைத்தெளிவுள்ள அரசியல்வாதியாகும். உலமா கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் ஒரு கட்சியாக இணைந்து அதன் உயர் பீடத்தில் இருந்தாலும் தனியான கட்சி என்ற வகையில் தனி சுதந்திரத்தை எமக்கு வழங்கியுள்ளார். இன்று வரை அவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் போகும் படியோ போக வேண்டாம் என்றோ ஒரு வார்த்தையும் எம்மிடம் கூறாத அளவுக்கு எமது கட்சிக்குரிய இறைமையை அவர் மதிக்கின்றார். இப்படிப்பட்ட பண்பட்ட அரசியல்வாதிகள் எவரும் முஸ்லிம் சமூகத்தில் இல்லை என்பதை உறுதியாக கூறுவேன்.

ஒரு உயர் பீட உறுப்பினர் எதிர் கட்சியின் கூட்டத்துக்கு போக முடியுமா என சம்பந்தப்பட்டவர் கேள்வி எழுப்பியுள்ளமை அரசியல் தெரியாத முட்டாள்த்தனமாகும். முதலில் மஹிந்த ராஜபக்ஷ எதிர் கட்சியை சேர்ந்தவர் அல்ல. அவரை பாராளுமன்றம் ஆளும் சுதந்திரக்கட்சியின் உறுப்பினராகவே இன்னமும் பார்க்கிறது. அதனால்த்தான் தமிழ் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக உள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் அ.இ. மக்கள் காங்கிரஸ் என்பன இணைந்துள்ள ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான கட்சியின் உயர் பீட உறுப்பினரே மஹிந்த ராஜபக்ஷ. இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரியின் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம் என்றால் அவரது உயர் பீட உறுப்பினர் கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ள முடியாது?

முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்த மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தில் கலந்த கொள்ளலாமா என கூறுகின்றனர். புலிகள் செய்த அளவு மஹிந்த முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்யவில்லை. இன்று அதே புலிகளின் வாரிசுகளான தமிழ் கூட்டமைப்புடன் கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்வது முஸ்லிம் சமூகத்துக்கான துரோகம் இல்லையா? முஸ்லிம்களை கொன்றொழித்த தமிழ் கூட்டமைப்பின் கூட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் போது புலிகளை ஒழித்து முஸ்லிம்களுக்கு விடுதலை பெற்றுத்தந்த மாவீரர், சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்தவின் கூட்டத்தில் கலந்து கொள்வதில் எத்தகைய தவறும் இல்லை.

கடந்த ஆட்சியில் சில தவறுகள் ஏற்பட்டன என்பது உண்மை. அதன் காரணமாகவே அமைச்சர் ரிசாத் பதியுதீன் துணிச்சலுடன் நல்லாட்சிக்கு ஆதரவளித்தார். எந்த விடயத்திலும் அமைச்சர் ரிசாதை பார்த்து சூடு போட்டுக்கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் அதற்குப்பின்னர்தான் தயங்கித்தயங்கி காதல் கடிதம் வேறு எழுதிவிட்டு வெளியே வந்தார்கள்.

ஆகவே எமது கட்சி தனியான கட்சியாகும். ஆனாலும் முஸ்லிம் சமூகத்தின் அரசியலை பொறுத்த வரை மிகச்சிறந்த தேசியத்தலைவராக நாம் அமைச்சர் ரிசாத் பதியுதீனை பார்ப்பதால் அவரை பலப்புடுத்தும் நோக்கில் அவரது கட்சியுடன் இணைந்து முஸ்லிம் சமூகத்தில் அக்கட்சியின் வளர்ச்சிக்காக செயற்படுகின்றோம். அமைச்சருக்கு இனவாதிகளால் ஆபத்து ஏற்படும் போது அக்கட்சியின் பதவிகளில் வசதிகளை அனுபவித்துக்கொண்டிருப்பவர்களை விட நாமே குரல் கொடுக்கிறோம் என்பதால் எம்மை எப்படியாவது அக்கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே முஸ்லிம் காங்கிரசின் வால்கள் இத்தகைய சிறு பிள்ளைத்தனமான அபாண்டங்களை அவிழ்த்து விடுகின்றனர்.

எமக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அரசியல் பக்குவத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. அ.இ. மக்கள் காங்கிரசில் இருந்து கொண்டே உலமா கட்சியை நடாத்தும் படியும் அவர் எமக்கு அனுமதித்ததன் மூலம் இலங்கை வரலாற்றிலேயே மிகச்சிறந்த, பண்பட்ட முஸ்லிம் அரசியல் தலைவராக நாம் அவரை பார்க்கிறோம் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.

Related Post