இந்நாட்டு முஸ்லிம்கள் எப்போதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குமே ஆதரவு நல்க வேண்டும் என்று சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
எதிரணியினரின் ஏமாற்று பசப்பு வார்த்தைகளை முஸ்லிம்கள் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழுநாட்டு மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இருக்கும் போது ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் துரோகமிழைத்த மைத்திரி அல்ல, எவர் அபேட்சகரானாலும் எமது ஜனாதிபதியே இத்தேர்தலிலும் அமோக வெற்றிபெறுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டி, கலஹா பிரதேசத்தில் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதரின் நிதியொதுக்கீட்டில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைப் பார்வையிடுவதற்காக பிரதியமைச்சர் நேற்று முன்தினம் அங்கு சென்றார். அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் எதிர்வரும் தேர்தலில் நாம் ஜனாதிபதி அவர்களுக்கே ஆதரவு நல்குவோம் என்று உறுதியளித்துள்ளனர்.
இவ்வைபவத்தில் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நான் சுமார் 25 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக உள்ளேன். இக்காலப்பகுதியில் பல அமைச்சுப் பதவிகளையும், பிரதியமைச்சுப் பதவிகளையும் வகித்துள்ளேன். ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் தான் எனது மாவட்ட மக்களுக்கு முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு சேவைகளை என்னால் பெற்றுக்கொடுக்க முடிந்தது.
குறிப்பாக குறுகிய காலத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கு மேல் சேவையாற்றியுள்ளேன்.
எமது ஜனாதிபதி அவர்கள் இன, மத, பிரதேச வேறுபாடுகள் பாராது முழு நாட்டையும் ஆசியாவின் அதிசயமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். அதன் பயன்களை மக்கள் அனுபவிக்கின்றனர்.
இவ்வாறான சூழலில் ஜனாதிபதியுடன் ஒன்றாக இருந்து, ஜனாதிபதிக்கும் கட்சிக்கும் மைத்திரிபால சிறிசேன துரோகம் இழைத்து இருக்கின்றார். அந்தத் துரோகத்திற்கு முழு நாட்டு மக்களும் எதிர்வரும் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவர். ஆகவே, முஸ்லிம்களும் கட்சி, அரசியல் பேதங்களை மறந்து நாட்டு நலன்களுக்கு முதலிடமளித்து ஜனாதிபதியின் கரங்களை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.