மஹிந்த ராஜபக் ஷ இந்நாட்டில் யுத்தத்தை முடித்து வைத்த யுக புருஷராவார். அவரை சிறையில் அடைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் தவறான செயற்பாடாகும் என நேற்று சபையில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில் ஐ.ம.சு.மு. பங்காளிக் கட்சித் தலைவர்களான தினேஷ், விமல், வாசுதேவ ஆகியோரின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அரசியலமைப்பு சபை தீர்மானம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஜோன் செனவிரட்ன இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில், யார் எதைச் சொன்னாலும் பல தலைவர்களும் முயற்சித்து முடியாமல் போன யுத்தத்தை முடித்து வைத்த பெருமை மஹிந்த ராஜபக் ஷவையே சாரும்.
இன்று அவரை திருடர், ஊழல் மோசடிக்காரர் என்று விமர்சித்தாலும் யுத்தத்தை முடித்த மாபெரும் தலைவர் அவர்.
அது மட்டுமல்லாது நாட்டின் அபிவிருத்திகளையும் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தினார். வடக்கிற்கு புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்தார்.
கடந்த கால ஆட்சியின் போது பல பிரச்சினைகள் காணப்பட்டமை உண்மைதான். அவை சரியான முறையில் தீர்க்கப்படவில்லை.
எனவே இன்று அனைவருக்கிடையேயும் தேசிய இணக்கப்பாடு தேவைப்படுகின்றது. மஹிந்த ராஜபக் ஷ நாட்டுக்கு சேவை செய்தவர். எனவே அவரை சிறையில் அடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது பிழையான செயற்பாடாகும்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் பிரதிவாதங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இத்திருத்தங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தினேஷ், விமல், வாசுதேவ போன்றோரின் திருத்தங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.