மஹியங்கனை பொலிஸார், பொலிஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த இரு தரப்புகளுக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையை அடுத்து எதிர்காலத்தில் பிரச்சினைகள் எதுவுமின்றி சமாதானமாக வாழ்வதாக இருதரப்பினரும் உறுதியளித்தனர்.
மஹியங்கனை நகரிலுள்ள பன்சலையில் கடந்த நோன்மதி தினத்தன்று பெளத்த தேரர் ஒருவர் நிகழ்த்திய மார்க்க பிரசங்கத்தில் முஸ்லிம்களைப் பற்றி தவறாக தெரிவிக்கப்பட்டமையையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் இளைஞர்கள் பெளத்த கொடிகளை எரித்ததாலேயே இந்த முறுகல் நிலை உருவானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் எட்டு இளைஞர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நோன்மதி தினத்தன்று தோரரின் மார்க்க பிரசங்கத்தில் முஸ்லிம்களைப் பற்றி தவறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து முஸ்லிம் இளைஞர்கள் பெளத்த கொடிகளை எரித்ததாக இரவு 12 மணிக்கு எச்சரிக்கப்பட்டனர்.
எரித்த கொடிகளுக்கு பதிலாக புதிதாக கொடிகளை வாங்கித் தருமாறு கூறி பெரும்பான்மை இனத்தவர்கள் சமாதானமாகியிருக்கிறார்கள்.
மறுதினம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வேறு சிலர் முஸ்லிம்களுக்கு தகாதவார்த்தைகள் பேசி பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட 8 இளைஞர்களையும் உறவினர்கள் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதுடன் அவர்கள் 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 23 ஆம் திகதி பெரும்பான்மையின வாலிபர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமை அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலே நேற்று -25- சமாதானப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லியனகேயின் தலைமையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் மஹியங்கனை பன்சலையில் மார்க்க பிரசங்கம் நடாத்திய தேரர் உட்பட 8 தேரர்களும், பங்கரகம்மன பள்ளிவாசல் நிர்வாக சபை உட்பட ஊர் பிரமுகர்கள் அடங்கிய 15 பேரும் கலந்துகொண்டனர்.
இது தொடர்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பங்கரகம்மன பள்ளிவாசல் செயலாளர் அலி அக்பரை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.
சமாதானப் பேச்சுவார்த்தையின் போது நடந்து முடிந்த சம்பவம் தொடர்பில் எதுவும் பேச வேண்டாமென உதவி பொலிஸ் அத்தியட்சகர் இருதரப்பையும் வேண்டிக்கொண்டார். மஹியங்கனை பகுதியில் சமாதானம் நிலவ வேண்டுமெனவும், இரு சமூகங்களும் ஒற்றுமையாக வாழவேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.
இதன் பின்பு எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினை உருவாகக்கூடாது. அதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் பொறுப்பாக இருக்கவேண்டுமெனவும் இதற்காக குழுவொன்றினை நியமித்து செயற்படுமாறும் எம்மை அறிவுறுத்தினார்.
ஊரில் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாதிருக்க நாம் ஜமாஅத்தை தெளிவுபடுத்தவுள்ளோம். அதற்காக நியமிக்கப்படும் கமிட்டி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.
கடைகள் சிறிது நேரம் பூட்டு
நேற்று பங்கரகம்மன மற்றும் மஹியங்கனையில் கடைகளைப் பூட்டிவிட்டு பெளத்த கொடி எரிப்புக்கு எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து அங்கு கடைகள் காலையில் சிறிது நேரம் பூட்டப்பட்டிருந்தன.
பொலிஸார் போஸ்டர்களை அகற்றியதுடன் வர்த்தகர்கள் கடைகளை திறக்க வேண்டும் என வேண்டிக் கொண்டனர். இதனையடுத்து கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
பங்கரகம்மனையில் சுமுக நிலை
பங்கரகம்மனயில் சுமுக நிலை நிலவுவதாகவும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு ரோந்துச் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் பள்ளிவாசல் செயலாளர் அலி அக்பர் தெரிவித்தார். இதேவேளை பங்கரகம்மன பகுதியைச் சேர்ந்த மஸ்ஜிதுல் நூர் தக்கியா உறுப்பினர் அபூ ஹனீபா இரவில் மக்கள் அச்சத்துடனே உறங்குவதாகத் தெரிவித்தார்.