மாகாண சபை எல்லை நிர்ணயத்தினால் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விருதோடை வட்டார அமைப்பாளரும், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.ஆஷிக் தெரிவித்தார்.
கற்பிட்டி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (10) சபைத் தலைவர் ஏ.எம்.இன்பாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பில் விஷேட உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஆஷிக், அதுதொடர்பில் மகஜர் ஒன்றையும் சபையின் தலைவரிடம் கையளித்தார்.
இதன்போது உரையாற்றிய அவர் குறிப்பிட்டதாவது,
சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு நன்கு திட்டமிட்டு குறித்த மாகாண சபை எல்லை நிர்ணயம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாங்கள் இந்த நாட்டில் எல்லா இனத்தவர்களுடனும் மிகவும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். நாட்டில் குழப்பங்கள் ஏற்படுவதையும், பிளவுகள் ஏற்படுவதற்கும் நாங்கள் விரும்பவில்லை.
எல்லா சந்தர்ப்பங்களிலும் எமக்கு அநீதி இழைப்பதற்கே பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களில் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் அநீதியே இழைக்கப்பட்டது.
கடந்த அரசாங்கத்திலும் எமது முஸ்லிம் சமூகம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இனவாத நடவடிக்கைகள் தலைவிரித்தாடின. பொருளாதார ரீதியாக முடக்கினார்கள்.
எனவே, கடந்த ஆட்சியில் இவ்வாறு சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்த முஸ்லிம் சமூகம் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள். தமிழ் , முஸ்லிம் மக்கள் ஒட்டுமொத்தமாக நல்ல ஆட்சி வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.
நல்லாட்சியிலாவது தமக்கு நீதி கிடைக்கும் என்றும் நிம்மதியாக வாழமுடியும் என்றும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், நல்லாட்சியிலும் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, மாகாண சபை தேர்தல் தொகுதிவாரியாக நடத்தப்படுவது எமது சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதனால் இந்த புதிய எல்லை நிர்ணயத்தையும், புதிய தேர்தல் முறைமையையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என்ற வகையில் வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.