இலங்கையில் மாடுகள் அறுப்பதற்கு எதிரான போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக சிங்ஹ லே அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த கால அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இப்போராட்டத்தை ஆரம்பித்து இலட்சக்கணக்கானோரின் கையொப்பத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் மகஜர் ஒன்றினைச் சமர்ப்பித்தும் அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளவில்லை என அவ்வமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
மாடுகள் அறுப்பதற்கு எதிரான சிங்ஹ லே அமைப்பின் கோரிக்கைகளை மீண்டும் ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை விரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரும் சிங்ஹ லே அமைப்பின் செயலாளருமான மெதில்லே பஞ்சாலோக தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மாடு அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பேராட்டத்தில் பௌத்த குருவொருவர் தீ வைத்துக்கொண்டு உயிரிழந்தார்.
போவத்தே இந்திர ரத்ன தேரர் கண்டியில் இவ்வாறு உயிர்த் தியாகம் செய்து கொண்ட பின்பு கூட அரசாங்கம் மாடு அறுப்பதை நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதனால் விரைவில் மீண்டும் எமது போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.
மாட்டிறைச்சி உண்பதைத் தடுக்க நாம் விரும்பவில்லை. அவ்வாறு உண்பது அவர்களின் உரிமையாகும். அதனால் மாட்டிறைச்சி உண்ணும் முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மக்களின் மாட்டிறைச்சி தேவையை நிறைவேற்றவதற்காக அரசாங்கம் வெளி நாட்டிலிருந்து இறைச்சியை இறக்குமதி செய்ய வேண்டும் எனக் கோரவுள்ளோம்.
எமது இந்த எதிர்ப்பு போராட்டத்தில் இந்து மற்றும் ஏனைய மக்களின் ஆதரவையும் பெற்று அவர்களையும் இணைத்துக்கொள்ளவுள்ளோம். இந்து மதத்தவர்கள் மாடுகளை தமது தெய்வமாக வணங்குகிறார்கள்.
பௌத்தர்கள் நாம் எமக்கு பால் புகட்டும் தாயின் அடுத்த ஸ்தானத்தில் பசுமாடுகளைக் கருதுகின்றோம். அதனால் மாடுகள் அறுக்கப்படக்கூடாது என்ற கொள்கையுடையவர்களாக இருக்கிறோம்.
இலங்கையில் தினம் 5 ஆயிரம் மாடுகள் அறுக்கப்படுகின்றன. பௌத்த நாடான இலங்கையில் மாடுகள் அறுக்கப்படுவதைத் தடை செய்யும்படி ஜனாதிபதியைக் கோரவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். (VIDIVELLI)