– பழுலுல்லாஹ் பர்ஹான் –
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்க காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக காத்தான்குடி நகர சபை, ஆரையம்பதி பிரதேச சபை ஆகிய எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களில் மேற்படி நகர சபை, பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் பிரதான வீதிகளில் அலைந்து திரிந்த 9 கட்டாக்காலி மாடுகளை போக்குவரத்து பொலிஸார் பிடித்துள்ளனர்.
மேற்படி விடயம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார திலங்க ஜெயலாலிடம் கேட்டபோது 5 தினங்களுக்குள் இக் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களிடம் 1 மாட்டுக்கு 5000.ரூபா வீதம் நகர சபை,பிரதேசசபை ஆகியவற்றுக்கு தண்டப்பணம் அறவிட்டு கொடுப்பதோடு இவர்களிடம் இந்த மாடுகளை இனிமேல் வீதிகளில் அலைந்து திரிய விடமாட்டேன் என்று வாக்குமூலம் பெற்று இறுதி எச்சரிக்கை வழங்கி குறித்த கட்டாக்காலி மாடுகளை விடுவிப்பதாகவும் அதன் பின்னர் அந்த மாடுகள் வீதியில் அலைந்து திரியும்போது பிடிபட்டால் அதற்கு நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்தார்.
குறித்த கட்டாக்காலி மாடுகளினால் வீதி விபத்து இடம்பெறுவதாகவும் இதனால் கட்டாக்காலி மாடுகளை வீதிகளில் அலைந்து திரிய விட வேண்டாம் என காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.