Breaking
Fri. Nov 15th, 2024

 கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களின் தாக்குதலுடன் தொடர்புடைய  கடைநிலை பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு அறிவித்துள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று தெரிவித்தது. மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக, நேற்று வியாழக்கிழமை(26) நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் என்.ஆரியதாஸ தெரிவித்தார். இறுதி முடிவு, நேற்று வியாழக்கிழமை(26) இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மற்றும் பொலிஸார் நடந்து கொண்டவிதம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்த, சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகளைக் கொண்ட மூவரடங்கிய குழுவொன்றை தேசிய பொலிஸ் ஆணைக்குழு நியமித்துள்ளதாக, அந்த ஆணைக்குழுவின் தலைவர் என்.ஆரியதாஸ, இம்மாதம் 2ஆம் திகதி திங்கட்கிழமை தெரிவித்திருந்தார். குறித்த குழு, 57 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை கடந்த வியாழக்கிழமை(19) சமர்ப்பித்திருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

இது தொடர்பிலான இறுதித் தீர்மானமே, நாளை இடம்பெறவுள்ள கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்களால், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது மாணவர்கள் மீது தடியடித் தாக்குதல் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம், நீர்த்தாரைப்பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரிக்கவே குறித்த குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post