Breaking
Mon. Dec 23rd, 2024

படுகொலை செய்யப்பட்டு வவுனியா, உக்குளாங்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது மாணவியின் கொலை தொடர்பில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 மாணவியின் அயல் வீட்டில் வசித்து வந்தவரான 35 வயதுடைய பாலசிங்கம் ஜனர்தன் என்ற குடும்பஸ்தரே விசாரணைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர  உறுதிப்படுத்தினார்.

கைது  செய்யப்பட்ட சந்தேக நபரை டி.என்.ஏ.பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் ஊடாக நடவடிக்கை எடுக்க பொலிஸார் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

டி.என்.ஏ. சோதனைகளை முன்னெடுக்க தேவையான மூலக் கூறுகள் சாட்சியாக ஏற்கனவே பெறப்பட்டுள்ள நிலையில் இந்த சோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி கெ.ஹரிஸ்ணவி (வயது 14) கடந்த செவ்வாய்கிழமை (16) தனது வீட்டில் தூக்கில் தொங்கியிருந்த நிலையில் சடலமாக பிற்பகல் 2.15 மணியளவில் மீட்கப்பட்டார்.

தாயார் தொழிலுக்கும் சகோதரர்கள் பாடசாலைக்கும் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்த மாணவி 2.15 மணியளவில் தாயார், சகோதாரர்கள் பாடசாலை முடிந்து வந்த போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பது அவதானிக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு மீட்கப்பட்டார்.

இந் நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவினர் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளிலேயே சந்தேகத்தின் இன்று சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post