மாதம்பை முஸ்லிம்களின் காணி சுவீகரிப்பு விவகாரம் தொடர்பில் பரிசோதனை செய்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையொன்றினைத் தனது அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு பாரிய நகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க மாதம்பை பிரதேச செயலாளரைக் கோரியுள்ளார்.
இந்த காணி சுவீகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் புனித பூமி பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் குடும்பங்களின் நிலை என்னவாகும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க பிரதேச செயலாளரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று மதியம் மாதம்பை முஸ்லிம்களின் காணி சுவீகரிப்பு விடயம் தொடர்பாக மாதம்பை ஜாமியுல் அல் பரீயா (Fariyya) ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் மாதம்பை கிராமத்தின் புத்திஜீவிகள் குழுவொன்று அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை அவரது அமைச்சில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
முஸ்லிம்களின் காணி சுவீகரிப்பு விடயத்தை கேட்டறிந்த அமைச்சர் சம்பிக்க உடனே மாதம்பை பிரதேச செயலாளரைத் தொடர்புகொண்டு குறிப்பிட்ட கோரிக்கையை விடுத்தார்.
காணி சுவீகரிப்பு விடயம் மற்றும் புனிதபூமி வர்த்தமானி அறிவித்தல், முஸ்லிம்களின் பூர்வீகம் உட்பட இவ்விவகாரம் தொடர்பான பூரண விபரங்களை உள்ளடக்கி மாதம்பை பிரதேச செயலாளருக்கு அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்கும்படியும் தன்னைச் சந்தித்த மாதம்பைப் பிரதேச பிரதிநிதிகளிடம் அமைச்சர் சம்பிக்க வேண்டுகோள் விடுத்தார்.
இவ்விவகாரத்தை அமைச்சர்கள் றிஷாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான் எம்.எச்.எம்.நவவி ஆகியோர் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் கவனத்திற்கும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி ஸ்தலத்துக்கு நேரடி விஜயத்தினை மேற்கொண்டு நிலைமையை அவதானித்துள்ளார்.
இதேவேளை பொலிஸ் பிரிவினர் நாளை வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் தொழுகையின் பின்பு எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனரா என்பது தொடர்பில் விசாரணை செய்துள்ளனர். அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என பதிலளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர் நுஸ்ரத் மஹ்மூத்
மாதம்பையில் முஸ்லிம்களின் காணி சுவீகரிப்பு விடயம் ஒரு திட்டமிட்ட செயலாகும். பல தசாப்த காலமாக பெரும்பான்மை சமூகத்துடன் நல்லுறவுடன் வாழ்ந்த முஸ்லிம்களை வேறுபடுத்துவதற்கான நடவடிக்கையே இது என மாதம்பை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் நுஸ்ரத் மஹ்மூத் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
இப்பகுதியில் இன முறுகல் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் அரசியல்வாதிகளும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தேசிய ஷூரா சபை என்பனவும் ஒன்றிணைந்து பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்றார்.
உலமா சபையின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் மொஹமட்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதித் தலைவர் ஏ.சி.அகார் மொஹமட்டை விடிவெள்ளி தொடர்பு கொண்டு கருத்து வினவியபோது மாதம்பை பகுதியில் முறுகல் நிலவாதிருப்பதற்காகவும் சமாதான சூழ்நிலை நிலவுவதற்காகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார்.
நேற்று மதியம் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடனான கலந்துரையாடலில் மாதம்பை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் எஸ்.எம்.அரபாத், எஸ்.எம்.எம்.அனீஸ், ஜே.எஸ்.எம்.ரிப்கான் மற்றும் எஸ்.எம்.ஜே.அமீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.