Breaking
Thu. Dec 26th, 2024

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் போரூர் கிராமத்தை சேர்ந்தவர் சேக் ஜமாலுதீன். இவரது மனைவி ரகீமா பேகம். இவர்களுக்கு 2 மகள்களும், நசீர்பாபா என்ற மகனும் உள்ளனர். சேக் ஜமாலுதீன் கிரானைட் கம்பெனி ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கிறார். மாதம் ரூபாய் 5 ஆயிரம் தான் வருமானம் பெற்றார். குடும்பத்தை காப்பாற்ற இந்த வருமானம் பற்றாக்குறையாக இருந்ததால் மனைவி தையல் வேலையில் ஈடுபட்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இவர்களது மகன் நசீர்பாபாவுக்கு படிப்பு மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. தனது ஏழ்மை நிலையிலும் தனது மகனின் ஆசையை நிறைவேற்ற சேக்ஜமாலுதீன் அவனை படிக்க வைத்தார். நசீர்பாபா 10 ஆம் வகுப்பு வரை நவோதயா பள்ளியில் இலவசமாக படித்தான். 10 ஆம் வகுப்பு தேர்வில் 600 க்கு 587 மதிப்பெண் பெற்று மாநிலத்தின் முதல் மாணவனாக தேர்வு பெற்றான். இதன் மூலம் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீசைதன்யா பள்ளியில் பிளஸ் 2 வகுப்பை இலவசமாக தொடர முடிந்தது. +2 வில் 1000 க்கு 969 மதிப்பெண் பெற்றான்.

பின்னர், ஐ.ஐ.டி நுழைவு தேர்வில் 239 ரேங்க் பெற்றான். கல்லூரி நிர்வாகத்தின் உதவி மூலம் கான்பூர் ஐ.ஐ.டி.யில் அவனுக்கு இடம் கிடைத்தது. அங்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் 2 ஆவது ஆண்டு படித்து வருகிறான். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனமான ஆரக்கிள் நிறுவனம் கல்லூரியில் வளாக தேர்வு நடத்தியது. இதில் நசீர்பாபா தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் ரெட் உட் சிட்டியில் உள்ள நிறுவனத்தில் அவருக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 200 லட்சம் சம்பளத்தில் வேலை வழங்கி உள்ளது. நசீர்பாபாவுக்கு கிடைத்த வேலை அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது.

Related Post