-சைபுதீன் எம்.முகம்மட்-
மாந்தை கிழக்குப் பிரதேச சபையைக் கைப்பற்றியமைக்கு கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு அமைச்சர் றிஷாட் ஆற்றிய பணிகளே காரணமாகுமென்று புதிய தவிசாளராக தெரிவுசெய்யப்பட்ட மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்தார்.
சபையின் முதலாவது அமர்வு நேற்று (18) முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நான், இந்த சந்தர்ப்பத்தில், இந்த நிகழ்வில் தவிர்க்க முடியாது கலந்துகொள்ளாது வெளிநாடு சென்றுள்ள எனது தலைவருக்கு நன்றிகளையும், மகிழ்ச்சிகளையும் வெளிப்படுத்துகின்றேன்.
கடந்த உள்ளூராட்சி சபையிலும் நான் பிரதிநிதியாக இருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் என்னை இந்த சபையின் தலைவராக்குவேன் என்று எனக்கு நம்பிக்கையூட்டி, அந்த உறுதிமொழியை நிறைவேற்றித் தந்த சாணக்கியமிக்க தலைவன், அமைச்சர் றிஷாட் பதியுதீனை நான் இங்கு நன்றியுணர்வுடன் பார்க்கின்றேன்.
இனவாதிகளும், துவேஷவாதிகளும் அவரை கொச்சையாகவும், துவேசமாகவும் விமர்சித்து வருவதானது எனக்கு மனவருத்தத்தைத் தருகின்றது.
அமைச்சருடன் இணைந்து இந்தப் பிரதேசத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களையும், பணிகளையும் மேற்கொண்டிருக்கின்றோம்.
இறைவனுக்கு முதல் வணக்கம் செலுத்திக்கொண்டு, எமது கட்சியினுடைய தலைவனுக்கு மனமார்ந்த நன்றிகளை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவிக்கின்றேன். எனக்கு அமைச்சர் ஒரு சகோதரன் போன்றவர்.
எனது தந்தையின் தகப்பனார் கடந்த காலத்தில் இந்தப் பிரதேச சபையின் முதல் தவிசாளராக பதவியேற்று, தொடர்ந்தும் அடுத்த முறையும் தெரிவாகி இரண்டு முறை தவிசாளராகப் பணியாற்றியவர்.
மன்னார் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த றகீம் என்பவரினூடாக இந்தப் பிரதேசத்தில் அவர் பல பணிகளை மேற்கொண்டிருந்தார்.
எனது தந்தை முஸ்லிம் மக்களுடன் கொண்டிருந்த உறவு எனது மனங்களில் ஆழமாக பதிந்திருந்தது. முஸ்லிம் மக்கள் 1990ம் ஆண்டு வடக்கை விட்டு வெறுங்கையுடன் திருப்பி அனுப்பப்பட்ட போது, எனது தந்தையார் மிகவும் கவலையுற்றிருந்தார். யுத்த முடிவின் பின்னர் மீள்குடியேற்றம் இடம்பெற்றபோது நான் அமைச்சருடன் இணைந்து செயலாற்றினேன்.
அமைச்சர் றிஷாட் இன, மத, பேதமின்றி எமக்கு உதவிய விதம், இந்த சபையினை எமது தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நாம் கைப்பற்றுவதற்கு காரணமாய் அமைந்தது.
பிரதேச அபிவிருத்தியை இன, மத, கட்சி பேதங்களுக்கு அப்பால் மேற்கொள்வதற்கு அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் கோருகின்றேன். அதேபோன்று, அமைச்சருடன் இணைந்து இந்தப் பிரதேசத்தை முன்னேற்றுவதற்கும், இறையாண்மையைக் கட்டிக் காப்பதற்கும் முன்னின்று உழைப்பேன் என உறுதியளிக்கின்றேன் என புதிய தவிசாளர்தெரிவித்தார்.