Breaking
Fri. Nov 15th, 2024
மாந்தை கிழக்கு பிரதேச மக்களை ஊடகங்கள் மூலமே காப்பாற்ற முடியும் என மாந்தை கிழக்கு பிரதேசசபை தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்தார்.
 
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
 
நமது பிரதேசத்தினுடைய எதிர்காலம் எமது மக்களுடைய இடர்பாடுகள் குறித்து தொடர்ந்து எனக்கு மக்கள் எழுத்து மூலமும், தொலைபேசி மூலமும், உறுப்பினர்கள் சபை மூலமும் இந்த கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டிருந்தன.
 
நாங்கள் இது தொடர்பாக எழுத்து மூலம் நாட்டினுடைய அரச தலைவர், பிரதமர், அமைச்சர், மாவட்ட, மாகாண உயர் அதிகாரிகளுக்கும், எழுத்து மூலம் மக்களுடைய கோரிக்கைகளை சமர்ப்பித்திருக்கின்றோம். மக்களும் நேரிலே தெரிவித்திருக்கின்றார்கள்.
 
இன்று வரை எந்த விதமான ஒரு நடவடிக்கையோ, ஆரம்பகட்ட விசாரணையோ, நடைபெறவில்லை. நீண்ட காலமாக எங்களுடைய பிரதேசம் விவசாயத்தை நம்பி வாழ்கின்ற பிரதேசம். 750 தொடக்கம் 800 வரையான குடும்பங்களுக்கு விவசாய நிலங்கள் இல்லை.
 
கடந்த நாடாளுமன்றத்தில் கூட இந்த எல்லைக்கல்லு போடுகிற நடவடிக்கைகள் பேசப்பட்டது. அது தொடர்பாக தாங்கள் கவனம் செலுத்துவதாக பத்திரிகையிலே வாசித்திருந்தேன். அதைவிட மிக முக்கியமான பிரச்சினை முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் 150க்கு மேற்பட்ட அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டு அந்த குளங்களின் கீழ் காணிகள் வழங்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டு இரண்டாம் முறை முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் மூலம் துப்பரவு செய்யப்பட்டு மீண்டும் அக்காணிகள் காடாக இருக்கின்றன.
 
அதே போல ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை குளங்களுக்கு செலவழித்து நாங்கள் கடந்த அரசின் மூலம் துப்பரவு செய்யப்பட்ட வன்னி விளாங்குளம், துவரங்குளம் என்ற குளத்தின் கீழே 52 குடும்பங்களுக்கு இரண்டு ஏக்கர் வீதம் காணிகள் அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
 
அதே போல நீலவட்டியா குளம் 60ஏக்கர் காணி துப்புரவு செய்யப்பட்டு 42 குடும்பங்களுக்கு அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டு அந்த காணிகளும், செய்கை செய்ய விடுவதற்கு பிரதேச செயலகத்தில் இருக்கின்ற, காணி உத்தியோகத்தர்களுடைய இஸ்திரத்தன்மை அந்த மக்களுக்கு துப்புரவு செய்யப்பட்டு பணம் எடுக்கப்பட்டிருக்கிறது.
அக்காணிகள் எங்கே என தேடும் நடவடிக்கை வேடிக்கையான விடயமாக நடந்து கொண்டிருக்கின்றது. காணி பயன்பாட்டுக்குழு கூட்டம் நடைபெறும் போது அதிலே ஒரு வேற்று பிரதேசத்தை சேர்ந்த தனிநபர் ஒருவருக்கு 49 ஏக்கர் காணி ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதற்கு காணி காட்டப்படுகின்றது.
 
அவ்விடயம் வட்டார பிரதிநிதியாக இருக்கும் எனக்கு தெரியாது. அந்த இடத்தில் இருக்கும் கமக்கார அமைப்பினருக்கோ தெரியாது. அக்காணிகள் கொடுப்பதாயின் அங்கிருக்கும் மக்களுக்கு கொடுங்கள். நாங்கள் அபிவிருத்தியை தடுக்கவில்லை. தனி ஒருவருக்கு ஒப்பந்தம் மூலம் 49 ஏக்கர் காணி வழங்கப்பட்டிருக்கிறது.
 
இது எந்த விதமான காணி பயன்பாட்டுக்குழு கூட்டத்துக்கும் வரவில்லை. மேலதிக அரசாங்க அதிபர் இந்த 49 ஏக்கர் காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருப்பதாக இணையத்தில் போடப்பட்டிருந்தது. பிரதேசத்திலே போடாமல் எவ்வாறு மாவட்டத்துக்கு போடுவது.
 
பிரதேசத்திலே அந்த விடயங்களை, அங்குள்ளவர்களுடன் வினவாமல், அங்குள்ளவர்களுடன், பொதுக்கூட்டம் செய்யாமல், எவ்வாறு போடுவது. இது ஒரு அதிகார துஷ்பிரயோகம். தன்னுடைய பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை, துஷ்பிரயோகமாகத்தான் நாங்கள் கருதுகிறோம். மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து மகஜர்கள் கொடுத்திருந்தார்கள்.
ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. மாவட்ட, மாகாண அதிகாரிகள் பாரபட்சமாக நடக்கின்றார்கள்.
 
அதிகாரிகளுக்காகத்தான் சேவை ஆற்றுகின்றார்களே தவிர மக்களுக்காக சேவையாற்றவில்லை. காணி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அவர்களுடைய உதவியாளர் மூலம், எட்டு லட்சம் ரூபாய் தொலைபேசி மூலம் கேட்டிருக்கிறார்கள்.
வருகின்ற மாதம் நாங்கள் இது தொடர்பாக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறையிட இருக்கின்றேன். மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளியுங்கள். மக்களுக்கு வழங்கிவிட்டு நல்ல பல திட்டத்துக்கு 49 ஏக்கரை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். அரச காணியை மக்களுக்கு வழங்குங்கள்.
 
இவ்வாறான காணிகளை வன இலாகாவிடமிருந்து விடுவித்து வழங்குங்கள். எங்கள் பிரதேசம் அபிவிருத்தி ஆவதற்கு தடையல்ல. மாந்தை கிழக்கில் துர்ப்பாக்கிய நிலை கல்லு போடுவதற்கு எங்களுக்கு அச்சமும் சந்தேகமும் எழுந்திருக்கின்றது.
 
அரச அதிகாரிகள் தான் இந்த இந்த இடங்களில் போடுமாறு ஆதரவு அளிக்கிறார்கள் இதனால் மக்கள் அச்சம் அடைகிறார்கள். நான் நினைக்கின்றேன், மடு பக்கத்தால் வந்து பறங்கியாற்றினை நோக்கி வரலாம். மடுவிற்கு அண்மையிலே, எங்களுடைய பிரதேசம். எதிர் வருகின்ற காலங்களில், மடுவுக்கும் எங்களுக்கும் இடையிலே ஒரு குடியேற்ற திட்டங்கள் கூட வரலாம்.
 
மக்களுடைய கோரிக்கைகள் தான் என்னிடம் உள்ளது. நான் இந்த ஊடகத்தின் மூலம், தெரிவிக்க வேண்டும். அரச தலைவருக்கும், பிரதம செயலாளருக்கும், காணி ஆணையாளருக்கும், மாவட்ட செயலாளருக்கும் அனுப்பியிருக்கின்றேன். அதை விட, கடந்த வாரம் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கூட்டத்தில் கூட நான் தெளிவாக இவ் விடயத்தினை கூறியிருக்கின்றேன்.
 
எந்த நடவடிக்கையும் இல்லை. ஏன் இவ்வாறு நடக்கிறது என்று தெரியவில்லை. ஏற்கனவே துப்பரவு செய்யப்பட்ட காணியை சௌபாக்கிய திட்டத்தின் மூலம் மீண்டும் துப்பரவு செய்கிறார்கள். அதனை மக்களுக்கு பிரித்து வழங்கவில்லை. அரச நிதியை வீண்விரயம் செய்கிறார்கள். இதற்கு ஆரம்ப கட்ட விசாரணை செய்து உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரச தலைவர் மற்றும் பிரதமருக்கு ஒரு வேண்டுகோளினை விடுக்கின்றேன். அபிவிருத்தி குழு கூட்டத்திலே அபிவிருத்தி குழு தலைவரிடம் பலமுறை கூறியும், எழுத்து மூலமும் வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
 
பிரதேச செயலகத்தின் அசமந்த போக்கும், பழிவாங்கும் நடவடிக்கையாகவே தற்போது கல்லு போடப்படுகின்றது. மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். தங்களுடைய வயல் நிலங்கள் கூட துப்புரவு செய்து வரம்புகள் போட முடியாத நிலை இருக்கின்றது.
உண்மை நிலையை நீங்கள் நேரடியாக கள விஜயம் செய்யுங்கள். அதிகாரிகளை, மேலதிகாரிகளை நம்பி பலனில்லை. இதை நீங்கள் வெளி உயர் அதிகாரிகள், அரச தலைவர், பிரதமர், விவசாய அமைச்சர்களிடம் கொண்டு செல்லுங்கள். ஊடக நண்பர்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்.
 
மாந்தை கிழக்கு பிரதேச மக்களை காப்பாற்றுங்கள். இந்த மக்களுடைய பிரச்சனைகளை, வெளியில் கொண்டு வாருங்கள். அதிகாரிகளிடம் நாங்கள் முறையிட்டு களைத்து விட்டோம்.
இன்று நாங்கள் வவுனியா மாவட்டத்தை நாடி வந்திருக்கின்றோம். இந்த பிரச்சினையை வெளியில் கொண்டு வாருங்கள். உங்கள் மூலமே எங்களுடைய பிரதேசத்தை காப்பாற்ற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post