மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத் தீர்மானத்திற்கு அமைவாக, பிரதேச செயலகப் பிரிவிற்கான விசேட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (18) நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக, வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன் கலந்துகொண்டார்
இந்தக் கூட்டத்தில் தந்த திணைக்களத் தலைவர்கள், அரச அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கிராம அலுவலர்கள் மற்றும் கிராமங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
பெரியமடு, காயாநகர், பள்ளமடு கிராம மக்களின் பாதுகாப்பிற்காக யானை வேலி அமைத்தல். பாப்பாமோட்டை, காத்தாலம்பிட்டி, விடத்தல்தீவு பகுதிகளுக்கான மீன்பிடித் துறை பிரச்சினைக்கான தீர்வை ஆராய்தல். வனவள திணைக்களத்தினால் போடப்படும் எல்லைக்கல் தொடர்பான ஆராய்வு, வயல் காணிகளில் பற்றைக்காடுகளை துப்பரவு செய்தல், கருங்கண்டல் வேளான்குளத்தின் நீர் ஏந்தா மேட்டுக்காணியினை மக்களின் குடியிருப்பிற்காக வழங்குதல். கூறாய் குளம் புனரமைப்பு, பெரியமடு குளம் புனரமைப்பு, இலுப்பைக்கடவை பாலம் புனரமைத்தல்,கடலரிப்பினை தடுப்பதற்காக தடுப்பணை அமைத்தல், மேய்ச்சல் தரை அடையாளப்படுத்தி பயன்பாட்டிற்கு உட்படுத்தல் போன்றவை தொடர்பில் இந்தக் கூட்டத்தில் முக்கிய விடயங்களாக கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த ரிப்கான் பதியுதீன்,
“இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடாத்தப்படுவதன் முக்கிய நோக்கம், மக்களின் குறைகளை நீக்கவும் எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காகவும் சட்ட விரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கும் ஆகும். எனவே, அரச ஊழியர்கள் பாரபட்சம் காட்டாது, பொதுவான முறையில் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதே போன்று, சட்டவிரோத செயல்கள், எமது வளங்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் சம்பவங்கள் போன்றவற்றை உரிய முறையில் கையாண்டு, அவற்றை தடுக்கும் பணியினையும் மேற்கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகும்.
மக்களுக்காக சேவையாற்றும் நீங்கள், மக்களின் குறைகளாக இக் கூட்டத்தில் கூறப்பட்ட விடயங்களை துரிதகதியில் நிவர்த்தி செய்வதற்கு, விரைவாக திட்டமிட்டு அவற்றை செயற்படுத்த வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
-ஊடகப்பிரிவு-