Breaking
Sun. Jan 5th, 2025

பலம் தரும் மாம்பழம்!

முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். இந்தியப் பழங்களின் அரசன் என்ற சிறப்பும் பெற்றது மாம்பழம். ஒருபுறம், பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாகக் கூறி, ஐரோப்பிய யூனியனானது இந்தியாவின் அல்போன்சா மாம்பழத்துக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது. மற்றொருபுறம், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுவருகின்றன. இதனால், மாம்பழத்தின் மீதான ஒருவித அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

‘பல்வேறு ஆரோக்கிய நலன்களையும் அள்ளித்தரக்கூடிய சுவையான மாம்பழத்தை, பயத்தின் காரணமாக ஒதுக்கித் தள்ளக் கூடாது’ என்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் சசிகலா. மாம்பழத்தின் சிறப்புகள், தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து மேலும் அவர் கூறுகையில்…
‘மாம்பழம் மற்றும் அதன் சுவையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், அதைப் பலரும் குறை சொல்லிக்கொண்டேதான் சாப்பிடுகிறோம். குறை சொல்லும் அளவுக்கு அதில் ஒன்றுமே இல்லை என்பதே யதார்த்தம். மனிதனுக்கு எந்தெந்தக் காலங்களில் என்ன தேவை என்பதை இயற்கை நன்றாக அறிந்துவைத்துள்ளது. நம் ஆரோக்கியத்துக்காக இந்தக் கோடை காலத்தில் இயற்கை தந்த அற்புதப் பரிசுதான் மாம்பழம்.
வைட்டமின் சி, ஏ மிக அதிகமாக உள்ளது. வைட்டமின் சி மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியம். வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் ஏற்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். கோடைக் காலத்தில்தான் கண் நோய்கள் வரும், அதேபோல உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை குறையும். இதைத் தடுக்க இயற்கையே, மாம்பழத்தை நமக்கு அளித்து நம் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. மேலும், இதிலுள்ள மற்ற சத்துக்கள் தோலுக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும். வெயில் காலத்தில் இது மிகவும் தேவை.
மாம்பழத்தை அதிகமாக உண்ணும் போது அது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். ஆண்கள் இதை அளவாக உண்ணும்போது ஆண்மை பெருக்கியாக செயல்படும். மாம்பழம் மனத் தளர்ச்சியை நீக்கும். சிறந்த சிறுநீர்ப்பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் மாம்பழம் செயல்படுகிறது.
மாம்பழத்தை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. உடலில் அதிக உஷ்ணம் உள்ளவர்களும் உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், சர்க்கரை நோயாளிகள் மாங்காயைத் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மாம்பழத்தின் தன்மையே வெப்பம். அந்த வெப்பம் உடலுக்கு தேவையானதும்கூட. எனவே இது சூடு என ஒரேடியாக ஒதுக்கித்தள்ளுவதும் தவறு. மாங்காயை அதிகம் உப்பு காரம் சேர்த்துச் சாப்பிடும்போது தோலில் வெடிப்பு, சிரங்கு போன்றவை ஏற்படும். அப்படி ஏற்பட்டால் உடனே, மாங்காய் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.

கற்கள் வைத்துப் பழுக்கவைக்கும் மாம்பழங்களையும் மிக எளிதாகக் கண்டறியலாம். இயற்கையாகப் பழுத்த பழங்களில் தோல் சற்று சுருங்கி கொழகொழவென இருக்கும். செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டது நன்கு பளபளப்பாக மின்னும். கடினமாகவும் இருக்கும். எனவே, பார்த்து வாங்குவது நல்லது. செயற்கையான பழங்களைச் சிறிதளவு சாப்பிட்டாலே பேதி, மார்பு எரிச்சல் போன்ற பாதிப்புகள் உடனடியாகத் தெரியவரும். அதன் மூலம் சாப்பிடுவதை நிறுத்திவிடலாம்.’
எல்லாமே இருக்கு…
மாம்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள், ஆன்டி ஆக்சிடென்ட்கள் என அனைத்தும் நிறைவாக உள்ளன. குடல், மார்பகம், புராஸ்டேட், ரத்தப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் மாம்பழத்துக்கு உள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதில் அதிக அளவில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின் சி உள்ளிட்டவை கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன.

மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்:-

மாம்பலத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:-

* 100 கிராம் மாம்பழச்சதையில் உள்ள சத்துக்கள் வருமாறு. நீர்ச்சத்து 81 கிராம். நார்ச்சத்து 0.70 கிராம். மாவுச்சத்து 16 கிராம். கொழுப்பு 0.40 கிராம், புரதம் 0.60 கிராம், உலோக உப்புகள் 0.40 கிராம், கரோட்டின் 27.43 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 16 மிலி கிராம், தயாமின் 0.008 மிகி, ரிபோபிளேவின் 0.09 மிகி, நியாசின் 0.09மிகி, கால்சியம் 14 மிகி, பாஸ்பரஸ் 16 மிகி, இரும்பு 1.30 மிகி என்ற அளவில் சத்துக்கள் உள்ளன.

மருத்துவப்பயன்கள்

1) மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.

2) தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும் கோடை மயக்கத்தைத் தீர்க்கும்.

3) மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.

4) பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

5) மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊற வைக்கும்.

6) மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும்.

7) கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

8) மாம்பழச்சதையை மிக்சியிலிட்டு சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்த சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடையில் ஏற்படும் வெப்பம், மற்றும் தோல் தொல்லைகளை நீக்கும்.

மாங்காயின் பயன்கள்

* இது அமிலத்தன்மை கொண்டது இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும்.மாங்காயை நறுக்கி வெயிலில் உலர்த்தி மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண ஸ்கர்வி எனப்படும் வைட்டமின் குறைபாடால் ஏற்படும் நோய் குணமாகும்.

* காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த இரத்த பேதி நிற்கும். வயிற்று உள் உறுப்புகள் பலப்படும்.மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும்.

* மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து உலர வைத்துச் சாப்பிட்டால் பசி ஏற்படும்.குமட்டல் நீங்கும். இலையைச்சுட்டு வெண்ணெயில் குழைத்து தீப்புண். காயங்கள் மீது தடவ இவைகள் விரைவில் ஆறும்.

* மாந்தளிரை மென்று தின்று வர பல் ஈறு உறுதிப்படும்.இலையை தீயிலிட்டு புகையை சுவாசிக்க தொண்டை வலி மாறும்.இதன் துளிர் இலைகளைப் பொடியாக்கி தேனில் குழைத்து உண்ண வயிற்றுப்போக்கு நிற்கும்.மாம்பூக்களை உலர்த்தி பொடியாக்கி தணலில் புகை போட கொசுக்கள் மாறிவிடும்.

* பூக்களை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி வயிற்றுப்போக்கின் போது அடிக்கடி குடித்திட வயிற்றுப்போக்கு நிற்கும்.
மாங்கொட்டை பருப்பைப் பொடியாக்கி வெண்ணெயில் கலந்து தின்ன வயிற்றுவலி குணமாகும்.

Related Post