Breaking
Sun. Dec 22nd, 2024

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்த குறிப்புப் புத்தகம் காணாமல் போனமை குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொலை குறித்து விசாரணை நடத்திய சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரகசிய தகவல்கள் அடங்கிய இந்த விசேட குறிப்புப் புத்தகத்தை காணாமல் போகச் செய்துள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்புப் புத்தகம் காணாமல் போன சம்பவம் குறித்து புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தம்மை கொலை செய்ய முயற்சிக்கும் நபர்கள் மற்றும் தம்மை கொலை செய்ய பின்தொடர்ந்த நபர்கள் பற்றிய முக்கிய விபரங்ளை லசந்த இந்த குறிப்புப் புத்தத்தில் பதிவிட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்கள் பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, லசந்தவை கொலை செய்வதாக தொலைபேசி ஊடாக மிரட்டிய நபர்களின் விபரங்களும் இந்த குறிப்புப் புத்தகத்தில் பதிவிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

லசந்த கொலையுண்ட போது இந்த குறிப்புப் புத்தகம் அவரது வாகனத்தில் காணப்பட்டதாகவும் அதனை கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் அப்போது கடமையாற்றிய அதிகாரி ஒருவர் தம்வசம் வைத்திருந்தார்.

பின்னர் இந்த குறிப்புப் புத்தகம் பொலிஸ் உயர் அதிகாரிகளின் கைகளுக்குச் சென்று இறுதியில் நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக செயற்பட்ட முக்கிய நபர் ஒருவரின் கைகளுக்கு சென்றுள்ளது என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் குறிப்புப் புத்தகத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் அது பற்றிய எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.

குறிப்புப் புத்தகம் காணாமல் போன சம்பவம் தொடர்பில் ஏற்கனவே உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த குறிப்புப் புத்தகத்தை கண்டு பிடித்தால் லசந்த கொலை குறித்த முக்கிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

By

Related Post